மலேசியாவில் மர்மமான முறையில் இறந்த பிரித்தானியச் சிறுமி: பிரான்சும் விசாரணையை தொடங்கியது!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மலேசியாவில் காணாமல்போன பிரித்தானிய சிறுமியின் உடல் நீரோடை ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பிரான்ஸ் தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நோரா என்னும் பிரித்தானியச் சிறுமியின் தந்தை பிரான்சைச் சேர்ந்தவர், தாய் அயர்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால் நோரா இரட்டைக் குடியுரிமை கொண்டவராவார்.

பிரான்சைச் சேர்ந்த நோராவின் தாத்தாவான Sylvain Quoirin, தனது பேத்தியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், பிரான்ஸ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஏற்கனவே நோராவின் குடும்ப சட்டத்தரணியான சங்கர N நாயரும், நோராவின் மரணம் தொடர்பான விசாரணையில், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் Jean-Yves Le Drianஇன் உதவியை ஏற்றுக்கொள்ளுமாறு மலேசிய பொலிசாரை கோரியிருந்தார்.

பிரான்சும் தனது குடிமக்களுக்கு வெளிநாடுகளில் ஏதாவது பிரச்சினை என்றால் நடவடிக்கையில் இறங்குவது வழக்கம்.

எனவே தற்போது பிரான்ஸ் நோரா வழக்கில் விசாரணையை துவக்கியுள்ளது. பாரீஸ் விசாரணை அலுவலகம் ஐரிஷ் - பிரெஞ்சு சிறுமியான நோராவின் மரணம் குறித்த குற்றவியல் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதனன்று தொடங்கிய நோராவின் உடற்கூறு ஆய்வுகளின் முடிவுகள், வழக்கத்தைவிட அதிக காலமாகியும் வெளியாகவில்லை.

நோராவின் குடும்பத்தினர் தங்கியிருந்த The Dusun resort என்னும் விடுதியிலிருந்து சுமார் 2.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நீரோடை ஒன்றின் அருகே உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நோராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளாடைகள் கூட இல்லாத நிலைமையில் நோராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதோடு, ஏற்கனவே பொலிசார் தேடும்போது கிடைக்காத உடல், மீண்டும் தேடும்போது கிடைத்ததாலும், நோராவின் குடும்பத்தினர் தங்கள் குழந்தையின் மரணத்தின் பின்னணியில் ஏதோ குற்றச்செயல் இருக்கலாம் என அஞ்சுகிறார்கள்.

மலேசிய பொலிசார் தங்கள் ஆரம்பகட்ட விசாரணையின்போது, குற்றச்செயல்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை, என்று கூறியிருந்த நிலையில், நோரா சற்று மூளை வளர்ச்சிக் குறைவான சிறுமி என்பதால், அவளால் தானாக தங்கியிருந்த இடத்தை விட்டு அவ்வளவு தூரம் சென்றிருக்க முடியாது என அவளது குடும்பத்தினர் உறுதியாக நம்புவதால், அவளது மரணத்தில் குற்றப்பின்னணி இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளதையடுத்து பிரான்ஸ் பொலிசார் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்