அவுஸ்திரேலியாவில் மாயமான பிரெஞ்சுக் குடிமகன்: தேடிச் சென்ற பொலிசாருக்கு காத்திருந்த ஏமாற்றம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அவுஸ்திரேலிய தேசியப்பூங்கா ஒன்றில் கடைசியாக காணப்பட்ட ஒரு பிரெஞ்சுக் குடிமகனை பொலிசார் தீவிரமாக தேடிக்கொண்டிருக்க, உண்மையில் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவந்தபோது அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பிரெஞ்சுக் குடிமகனான Yann Buriet (31), Kakadu தேசியப்பூங்காவில் ஆகத்து மாதம் 17 ஆம் திகதி காணப்பட்ட நிலையில், அதன்பிறகு அவரைக் காணவில்லை.

அவரது வாகனம் மட்டும் ஐந்து நாட்களாக அப்பகுதியில் நிறுத்தப்படிருப்பதை அறிந்த அவுஸ்திரேலிய பொலிசார், பிரமாண்ட தேடுதல் வேட்டை ஒன்றில் இறங்கினர்.

பிரான்ஸ் தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதோடு, Burietஇன் குடும்பத்தாருக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

தன்னை தேடும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளதை அறியாத Buriet, ஐந்து நாட்களுக்குப்பிறகு தனது வாகனம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு வருவதைக் கண்ட பொலிசார் குழப்பமடைந்துள்ளனர்.

பின்னர்தான் தெரியவந்தது, சிறுவர்களுக்கான புத்தகம் ஒன்றை எழுதுவதற்காக தேசியப் பூங்காவிலுள்ள பாதுகாப்பான ஒரு குகைக்குள் Buriet தங்கியிருந்தார் என்கிற விடயம்.

ஐந்து நாட்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உட்பட சகல வசதிகளுடனும் குகைக்கு புறப்பட்ட Buriet, முறைப்படி யாருக்கும் தகவல் தெரிவிக்காததால்தான் இத்தனை குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

தன்னால் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டதை அறிந்து Buriet வெட்கத்தால் தலையைச் சொறிய, பொலிசாருக்கோ அவர் உயிருடன் கிடைத்த மகிழ்ச்சி ஒருபக்கம், தங்கள் தேடுதல் வேட்டை இப்படி ஆகிவிட்டதே என்ற ஏமாற்றம் ஒருபக்கம் என பல்வேறு உணர்ச்சிகளுடன் சம்பவம் சுபமாக நிறைவுபெற்றது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்