பிரெக்சிட்: பிரெஞ்சு நாட்டவரை திருமணம் செய்து கொள்வது ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட்டுக்குப்பின் உதவுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டவர் ஒருவரையோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய குடிமகள்/குடிமகன் ஒருவரையோ திருமணம் செய்திருப்பதால் அல்லது திருமணம் செய்துகொண்டால் அது பிரான்சில் வாழ்வதற்கு ஒரு தங்க டிக்கெட்டாக இருக்கும் என்ற நம்பிக்கை பிரித்தானியர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

ஆனால் உண்மையில் அது அவ்வளவு எளிதான் ஒரு விடயமல்ல!

பிரெக்சிட்டுக்குப்பின் பிரித்தானியர்கள் பிரான்சில் வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று, பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது, மற்றொன்று, பிரான்சில் வாழ, வாழிட உரிமத்திற்கு விண்ணப்பிப்பது.

எப்படியானாலும், இரண்டிற்குமே ஏராளமான ஆவணங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். சரி, இவை இரண்டில் எது சிறந்தது?

குடியுரிமை பெற்றவர்கள் பிரான்சில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழலாம், ஏன் தேர்தலில் வாக்கும் அளிக்கலாம்.

ஆனால் வாழிட உரிமம் பெற்றவர்களுக்கு சில மட்டுப்படுத்தல்கள் உள்ளன. என்றாலும், குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது சிக்கலான ஒரு விடயம், அது நீளமான செயல்முறையும் கூட (நீங்கள் பிரான்ஸ் நாட்டவரை மணந்திருந்தாலும்கூட).

குடியுரிமை பெற 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம், ஆனால் வாழிட உரிமம் பெற ஆறு மாதங்கள்தான் பிடிக்கும் (அதைவிட சீக்கிரத்திலும் கிடைக்கலாம், ஆனால் இது இடத்துக்கு இடம் மாறுபடும்).

நீங்கள் இதுவரையில் விண்ணப்பம் அளிக்கவில்லையென்றால், ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட்டுக்குப்பின் அளிக்கப்பட உள்ள grace period காலாவதியாவதற்குள் உங்கள் உங்கள் குடியுரிமை உறுதி செய்யப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது.

அதே நேரத்தில், நீங்கள் வாழிட உரிமம் பெற்றுவிட்டால், அதன் பின்னர், விதிகளுக்குட்பட்டு நீங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தவர் ஒருவரை திருமணம் செய்திருப்பீர்கள் என்றாலும் நீங்கள் முறைப்படி குடியுரிமைக்கு விண்ணப்பித்துதான் ஆக வேண்டும், நீங்கள் விண்ணப்பிக்கும் வகை மட்டும் சற்று மாறும்.

உங்கள் வாழ்க்கைத்துணைவர் பிரான்ஸ் நாட்டவராக இல்லாமல், மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டைச் சேர்ந்தவராக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு பிரான்சில் சட்டப்படி வாழ்வதற்கான நெறிமுறைகளுக்கு அவர்கள் உட்பட்டுள்ளார்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

அதன்பின்னர் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய குடும்ப உறுப்பினராக வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.

இது வாழ்க்கைத் துணைக்குத்தான் என்றில்லை, பெற்றோரோ பிள்ளைகளோ கூட விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஒரு ஐரோப்பிய ஒன்றிய குடும்ப உறுப்பினராக விண்ணப்பிக்கும்போது, பாஸ்போர்ட், மூன்று புகைப்படங்கள், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினருடன் உங்களுக்கு என்ன உறவு என்பதை காட்டும் ஆதாரம், உங்கள் துணைவருக்கு பிரான்சில் வாழ உரிமை உள்ளது என்பதைக் காட்டும் ஆதாரம் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.

பிரெக்சிட்டுக்குப்பின், நீங்கள் பிரான்சுக்கு வந்து மூன்று மாதங்களுக்குள் உங்கள் விண்ணப்பத்தை அளித்துவிட்டதை உறுதி செய்யவேண்டும்.

நீங்கள் தாமதமாக விண்ணப்பித்தால், அப்போது உங்களுக்கு 'regularisation visa' ஒன்று வேண்டியிருக்கும், அதற்கான கட்டணம் 340 யூரோக்கள்.

முதல் முறை வாங்கும்போது, உங்கள் சந்தர்ப்ப சூழலைப் பொருத்து இது ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும், அதை நீங்கள் மீண்டும் புதுப்பித்தும் கொள்ளலாம்.

உங்கள் திருமணம் பிரான்சில் குடியேறுவதற்காக மட்டுமே செய்யப்பட்டது என்று உள்ளூர் பிரான்ஸ் அதிகாரிகள் நம்பினால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்