ஆல்ப்ஸ் மலையில் 43 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளைஞர்: முயற்சியை கைவிடாத குடும்பத்திற்கு கிடைத்த செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்திற்குச் சென்ற இளைஞர் ஒருவர், 43 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை தேடும் முயற்சியை கைவிடவே இல்லை.

1976ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்திற்கு சென்ற Jean-François Benedetti மாயமானார்.

அவரது பெற்றோர் சற்றும் மனம் தளராமல் அவரை தேடி வந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன் அவரது தாயும், கடந்த ஆண்டு அவரது தந்தையும் இறந்து போன நிலையிலும் அவரது சகோதரர்கள் தொடர்ந்து அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் Benedettiயின் உடல் என கருதப்படும் ஒரு உடல், அவர் காணாமல் போன பகுதியில் 43 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்துள்ளது.

அந்த பகுதியில் மலையேற்றத்திற்கு வழக்கமாக செல்லும் Benedettiயின் சகோதரர்கள், ஆரஞ்சு நிறத்தில் ஏதோ தெரிவதைக் கண்டு Grenoble பகுதியில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளார்கள். அதன்படி நேற்று முன்தினம் அப்பகுதிக்கு ஹெலிகொப்டரில் சென்ற மீட்புக்குழுவினர், 3,000 மீற்றர் உயரத்தில் இறங்கி, சில உடை துணுக்குகளையும், உடல் பாகங்களையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.

DNA பரிசோதனைக்காக அந்த உடல் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அது நிச்சயம் Benedettiயின் உடலாகத்தான் இருக்கும் என தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலையேற்ற வீரரும், பிரபல கார்ட்டூனிஸ்டுமான Jean-Marc Rochette என்பவர் Benedettiயின் தாயை சந்தித்தபோது 50 ஆண்டுகளுக்குப்பின் உங்கள் மகனை பனிமலை திரும்பக் கொடுத்துவிடும் என்று கூறியிருக்கிறார்.

அவர் கூறியது போலவே ஆல்ப்ஸ் மலை Benedettiயின் உடலை திரும்பக் கொடுத்துள்ளது, அதுவும் 43 வருடங்களிலேயே!

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்