பரிசல் கவிழ்ந்து விபத்து: குடும்பத்தினர் கண் முன்னே பிரான்ஸ் பெண்மணிக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் வெளிநாடு வாழ் இந்திய பெண் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தடையை மீறி பரிசல் இயக்கியதால் பரிசல் ஓட்டி மனோகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வாழும் இந்தியரான மனோ என்பவர் தனது மனைவி அஞ்சலாட்சி, மகள் மோஷிகா ஆகியோருடன் ஒகேனக்கல் சென்றுள்ளார்.

இவர்கள் இன்று காலை பரிசலில் செல்ல விரும்பினர். முசல் மருவு என்ற இடத்தில் இருந்து ஒகேனக்கல் நோக்கி இவர்கள் மனோகரன் என்பவரின் பரிசலில் பயணித்துள்ளனர்.

அவர்களுடன் கார் சாரதி கந்தனும் சென்றுள்ளார். அவர்கள் சென்ற பரிசல் நீலகிரி பிளேட் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பரிசலில் பயணம் செய்த அஞ்சலாட்சி தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். மனோ, அவரது மகள் மோஷிகா, சாரதி கந்தன் ஆகியோர் மரக்கிளைகளை பிடித்து ஆற்றில் தத்தளித்தபடி இருந்தனர்.

அவர்களை பரிசல் ஓட்டி மனோகரன் மீட்டு கரை சேர்த்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற ஒகேனக்கல் காவல்துறையினர் நீரில் அடித்துசெல்லப்பட்ட அஞ்சலாட்சியை தேடும்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 3000 ரூபாய் பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றிய பரிசல் ஓட்டி மனோகரனை பிடித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்