அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள் சில...

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அக்டோபர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில மாற்றங்கள் மற்றும் அவை அமுலுக்கு வரவிருக்கும் திகதி குறித்து சற்று விவரிக்கிறது இந்த செய்தி!

எரிவாயு விலை

எரிவாயுவை பொருத்தவரை மகிழ்ச்சியான செய்திதான், எரிவாயு விலை குறைய இருக்கிறது. செப்டம்பரிலேயே எரிவாயு விலையில் 0.9 சதவிகிதம் குறைக்கப்பட்டது.

தற்போது அக்டோபரில் 2.4 சதவிகிதம் விலை குறைப்பு செய்யப்பட இருக்கிறது.

உணவு சமைக்க எரிவாயு பயன்படுத்துவோருக்கு 0.6 சதவிகிதமும், சமைக்கவும் தண்ணீரை சூடாக்கவும் எரிவாயு பயன்படுத்துவோருக்கு 1.4 சதவிகிதமும், வீட்டை வெப்பப்படுத்துவதற்கு எரிவாயு பயன்படுத்துவோருக்கு 2.5 சதவிகிதமும் விலை குறைய இருக்கிறது.

பணி ஓய்வு திட்டங்கள்

தனி நபர் பணி ஓய்வு சேமிப்பு திட்டத்தை (PERi) எளிமையாக்குவதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன.

இது, தனி நபர்கள் ஓய்வூதியம் தவிர்த்து பணி ஓய்வுக்குப்பின் பயன்படுத்திக்கொள்வதற்கு உதவும் வகையில் சேமிப்பதற்கான திட்டமாகும்.

என்றாலும் தங்கள் பணிக்காலத்தின்போது, அரசுப்பணியிலிருந்து தனியார் துறைக்கு மாறுபவர்களுக்கு இத்திட்டம் சிக்கலாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

ஓய்வூதியம் தொடர்பில் விவாதங்கள்

ஓய்வூதியம் தொடர்பில் விவாதங்களை நடத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் முடிவு செய்துள்ளார்.

முதல் விவாதம் Rodezஇல் வரும் வியாழனன்று நடைபெற உள்ளது.

வரி செலுத்துவதற்கான காலக்கெடு

உங்களுக்கு பிரான்சில் சொத்து இருந்தால், நீங்கள் அக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்குள் (ஒன்லைனில் கடணம் செலுத்தினால் அக்டோபர் 20) சொத்து வரியை செலுத்தவேண்டும். தவறினால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

செயற்கை முறை கருவூட்டல் திட்டத்திற்கு எதிராக போராட்டம்

கடந்த வாரம் ஓரினச்சேர்க்கையாளர்களான பெண்களும், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழும் பெண்களும், செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

சில, மத மற்றும் சமூக அமைப்புகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் மாதம் 6ஆம் திகதி பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளன.

காகித பயன்பாடு இல்லாத மெட்ரோ

நீங்கள் பாரீஸில் வசிப்பவர்கள் என்றால், ViaNavigo appஐ பயன்படுத்தி உங்கள் மொபைல் உதவியுடனேயே மெட்ரோவில் பயணிக்கலாம்.

என்றாலும் இந்த ViaNavigo app எல்லாவித மொபைல்களிலும் இயங்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

கட்டிடம் கட்டுவதற்கு கட்டுப்பாடுகள்

அக்டோபர் 1 முதல், மூன்று தளங்களுக்கு மேல் கொண்ட கட்டிடங்கள் கட்டப்படும்போது, அவற்றில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்கவேண்டும்.

பிரெக்சிட்?

தற்போதைக்கு பிரெக்சிட்டுக்கான காலக்கெடு அக்டோபர் 31 என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிச்சயமாக இம்முறை பிரெக்சிட் நிறைவேற்றப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனவே, நீங்கள் பிரான்சில் வாழும் பிரித்தானியர்களாக இருக்கும்பட்சத்தில், பிரெக்சிட் பிரிவை அணுகி என்னென்ன ஆயத்தங்கள் செய்யவேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்