திடீரென்று கேட்ட அசரீரி.... பாரிஸ் தாக்குதல்தாரி தொடர்பில் அவர் மனைவி வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பாரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் முன்னெடுக்கும் முன்னர் தாக்குதல்தாரி விசித்திர குரல்களை கேட்டதாக அவரது மனைவி விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் காவல்துறையில் தொழில்நுட்ப நிபுணராக பல ஆண்டுகள் பணியாற்றிய Michael Harpon வியாழனன்று பீங்கான் கத்தி மூலம் ஒரு பெண் காவலர் உள்ளிட்ட நால்வரை கொடூரமாக குத்திக் கொலை செய்தார்.

இந்த விவகாரத்தில் இன்னொரு பொலிஸ் அதிகாரியால் Michael Harpon தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

Michael Harpon-ன் இந்த கொலைவெறி தாக்குதலில் இருவர் காயமடைந்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த அவர் இதுவரை விசித்திரமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட்டது இல்லை எனவும், சமீபத்தில் அவர் இஸ்லாமுக்கு மதம் மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது எனவும் பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Christophe Castaner தெரிவித்துள்ளார்.

தற்போது Michael Harpon-ன் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்திற்கு முந்தைய நாள், தமது கணவரின் நடவடிக்கை விசித்திரமாக இருந்தது எனவும், திடீர் திடீர் என்று விழித்துக் கொண்டு ஏதோ பிதற்றினார் எனவும், விசித்திர குரல்கள் அசரீரியாக கேட்பதாக கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

45 வயது Michael Harpon கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் தீவிரவாத நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக கருத முடியாது என தெரிவித்துள்ள அதிகாரிகள், ஆனால் அந்த கோணத்திலும் விசாரணையை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்