பாரீஸ் கொலையாளியின் தீவிரவாத கருத்துக்களை கவனிக்காமல் கோட்டை விட்ட பொலிசார்: விளைவு?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸ் காவல்துறை தலைமையகத்தில் கத்திக்குத்து நடத்திய கொலையாளியின் தீவிரவாத கருத்துக்களை பொலிசார் கவனிக்கத் தவறியதன் விளைவே, அவர் நான்கு சக ஊழியர்களை கொலை செய்ததற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாரீஸ் காவல்துறை தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய Mickael Harpon(45) என்னும் நபர், தன் சக ஊழியர்கள் ஐவரை கத்தியால் குத்தியதில் நால்வர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், Harpon ஏற்கனவே தீவிரவாத கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் என்பது தெரிந்தும், அதற்கு பொலிசார் முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிட்டதாக கூறப்படுகிறது. இதை பிரான்சின் உள்துறை அமைச்சரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி, Saïd மற்றும் Chérif Kouachi என்னும் இரண்டு சகோதரர்கள், பாரீஸிலுள்ள Charlie Hebdo என்ற பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் படுகாயமடைந்தனர்.

Harpon, இந்த தாக்குதலை வெளிப்படையாகவே பாராட்டியிருக்கிறார். ஆனால் இதுகுறித்து அவரது சக ஊழியர்கள் யாரும் புகாரளிக்கவில்லை, அங்கேயே தவறு நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Christophe Castaner, அவரது கோப்புகளில் அவர் தீவிரவாத கருத்துகளால் ஆட்கொள்ளப்பட்டவர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்படி ஏதாவது துப்பு கிடைத்திருந்தால், இந்த அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம் என்றார் அவர்.

தற்போது விசாரணை அதிகாரிகள் Harponக்கு தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் தொடர்பு இருந்ததைக் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் உள்துறை அமைச்சர் Castaner, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக, நாளை நாடாளுமன்ற உளவுத்துறை கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்