புலம்பெயர்வோர் படகுகளில் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்க பிரான்ஸ் பொலிசாரை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானியா, அவர்களுக்கான ஊதியத்தை தானே அளிக்க முன்வந்துள்ளது.
சமீபத்தில் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Christophe Castanerம் பிரித்தானிய உள்துறைச் செயலர் பிரீத்தி பட்டேலும் மேற்கொண்ட ஒரு சந்திப்பின்போது, சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் கடக்க முயல்வதை தடுக்க நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
செப்டம்பர் 28 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த கூட்டுத்திட்டத்தின்படி, கலாயிசை சுற்றியுள்ள கடற்கரை பகுதியில் அதிக பொலிசார் ரோந்துக்கு நியமிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே புலம்பெயர்தலை தடுப்பதற்காக பிரித்தானியா கொடுக்க முன்வந்துள்ள 7 மில்லியன் யூரோக்களுடன் இந்த பொலிசாருக்கான ஊதியத்தொகையும் சேர்த்துக்கொள்ளப்படும்.
இந்த புலம்பெயர்தலால் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்காக மட்டுமின்றி, மனித உயிர்கள் இழப்பை தடுப்பதற்காகவும், இதை முற்றிலும் நிறுத்துவது மிகவும் அவசியம் என்றார் Christophe Castaner.
ஆகத்து மாதத்தில் மட்டும் 1,473 புலம்பெயர்வோர், பிரான்ஸ் கரையிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றதாக உள்ளூர் அலுவலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.