பாரீஸில் பயணச்சீட்டு பரிசோதகர்களிடமிருந்து தப்ப இளைஞர் செய்த ஆபத்தான செயல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில், பயணச்சீட்டு பரிசோதகர்களிடமிருந்து தப்புவதற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல், ரயிலுக்கு காத்திருந்த பயணிகளை பதற வைத்தது.

பாரீஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த ஒரு இளைஞர், அதிகாரிகளைக் கண்டதும் சட்டென ரயில் தண்டவாளத்தில் குதித்தார்.

ரயில் தண்டவாளத்தில் அவர் ஓட, அதிகாரிகள் ரயில் நடைமேடையில் அவரை துரத்திக்கொண்டு ஓடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பாரீஸ் ரயில் தண்டவாளங்கள் மிகவும் ஆபத்தானவை.

அவை தண்டவாளங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள 750 வோல்ட் உயர் மின்னழுத்தம் செல்லும் ஒரு கம்பியின் மூலம் மின்சாரம் பெறக்கூடியவை (பெரும்பாலான மேலை நாடுகளில் அப்படித்தான்).


அப்படியிருக்கும்போது பயணச்சீட்டு எடுக்காத அந்த நபர் ரயில் தண்டவாளத்தில் குதித்ததும், அவரை மின்சாரம் தாக்கிவிடுமோ என பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். நல்ல வேளையாக ரயில் நிலையத்தில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதால், தண்டவாளத்தில் குதித்த அந்த நபர் தப்பினார்.

பின்னர் அவர் அதிகாரிகளிடம் சிக்கினாலும், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.

பொதுவாக பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 50 யூரோக்கள் அபராதமாக வசூலிக்கப்படும்.

சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், அந்த நபர் தண்டவாளத்தில் ஓடுவதைக் கண்டுள்ள பலரும், அபராதம் செலுத்துவதற்கு பதில் உயிரை பணயம் வைத்த அந்த நபரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்