பாரீஸ் நகரின் பழம்பெரும் அடையாளச் சின்னம்... முதன் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தவிர்ப்பு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்த புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவலயம் நூற்றாண்டுகளில் முதன் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளது.

உலக நாடுகளை மொத்தமாக உலுக்கிய இரண்டு உலகப் போர் காலகட்டத்திலும் நோட்ரே டேம் தேவலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட தற்செயலான தீ விபத்தானது இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக முதன்முறையாக நள்ளிரவு கிறிஸ்துமஸ் வழிபாடுகளை முன்னெடுப்பதை தடுத்துள்ளது.

இருப்பினும் அதிகாரிகளும் தேவாலய நிர்வாகிகளும் துரிதமாக செயல்பட்டு மீண்டும் வழிபாடுகளை முன்னெடுக்கும் வகையில் தேவாலயத்தை தாயார் செய்து வருகின்றனர்.

தேவாலயத்தில் உள்ள முக்கியமான பொருட்களை எல்லாம் இடம்மாற்றியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் வழிபாடானது அருகாமையில் உள்ள இன்னொரு தேவாலயத்தில் வைத்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு நள்ளிரவு வழிபாடுகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது இதுவே முதல் முறை என்று கதீட்ரல் ரெக்டர் Patrick Chauvet கூறியுள்ளார்.

முதலாம் உலகப் போரின் படுகொலைகளுக்கு மத்தியிலும் நோட்ரே டேம் தேவலயத்தில் நள்ளிரவு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது எனவும் Patrick Chauvet சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டும் கிறிஸ்துமஸ் நாளில் நோட்ரே டேம் தேவலயம் மூடப்பட்டிருந்தது என்றார் அவர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள நோட்ரே டேம் தேவாலயம், கோதிக் கட்டிடக்கலையின் முக்கியமான மைல் கல்லாகும். வருடந்தோறும் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ள இத்தலம், ஈபிள் கோபுரத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

குறித்த தேவாலயமானது விரிவான புனரமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பாரிஸ் அன்னை என அழைக்கப்படும் 850 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நோட்ரே டேம் தேவாலய, ஏப்ரல் 15 ஆம் திகதி காலையில் நடந்த தீவிபத்தில் சிதைந்தது.

கட்டுமான பணியின் போது ஏதேனும் தீப்பிழம்பு இச்சம்பவத்துக்கு காரணமாகயிருக்கலாம் என கருதப்படுகிறது. மரத்தினால் செய்யப்பட்ட தேவாலயத்தின் வாசல் மற்றும் கூரை தீயினால் சரிந்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக பாரிஸ் நகரின் சந்தோஷமான மற்றும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நோட்ரே டேம் தேவாலய மணிகள் மூலமே அறிவிக்கப்பட்டு வந்துள்ளன.

பாரிஸ் மக்களின் வாழ்வோடு கலந்த பாரிஸ் அன்னை எரியும் காட்சியை காண சகிக்காமல் மக்கள் துயரத்தால் துடித்தனர்.

வரலாறு முழுக்கவே இத்தேவாலயம் சிதைவு, மீட்டுருவாக்கம் என்ற சுழற்சியிலேயே இருந்து வந்திருக்கிறது.

1160 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானம் 1260 ஆம் ஆண்டில் நிறைவுற்றாலும், பல நூற்றாண்டுகளில் இதன் வடிவம் அடிக்கடி மாற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்