35 பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: நிறுவன முன்னாள் தலைவருக்கு நான்கு மாதங்கள் சிறை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் 35 பணியாளர்கள் தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

2008க்கும் 2009க்கும் இடையில் பிரெஞ்சு மொபைல் நிறுவனமான Orange நிறுவனத்தில் பணிபுரிந்த 35 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் .

அவர்களில் சிலர், தனது சக ஊழியர்கள் கண்களுக்கு முன் ஐந்தாவது மாடியின் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துகொண்ட ஒருவர் உட்பட, தங்கள் தற்கொலைக்கு Orange நிறுவனமும் அதன் மேலாளர்களும்தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.

ஒருமுறை, தனது ஊழியர்களைக் குறித்து, அவர்களை ஏதாவது ஒரு வழியில் வெளியேற்றி விடுவேன், அது ஜன்னல் வழியாகவும் இருக்கலாம், கதவு வழியாகவும் இருக்கலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைவரான Lombard, மூத்த மேலாளர்களிடம் கூறியதாக தெரிகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். தான் நிறுவனத்தில் மேற்கொள்ள முயன்ற மாற்றங்கள் ஊழியர்களை வருத்தத்திற்குள்ளாக்கியது தனக்கு தெரியும் என்று கூறிய Lombard, ஆனால், அதனால்தான் ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கூறுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.

2009ஆம் ஆண்டு ஜூலை மாதம், 51 வயது ஊழியர் ஒருவர், கொடூரமாக நிர்வாகம் செய்யும் நிறுவன தலைவர்கள் மீது குற்றம் சாட்டி கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு, அலுவலக வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.

அந்த நேரத்தில் தனியார் மயமாக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தில் பல மாற்றங்களை மேற்கொள்ள Lombard முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

சுமார் 22,000 பேரை வீட்டுக்கு அனுப்ப முயன்றதோடு, சுமார் 10,000 ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

சில ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், தங்கள் குடும்பங்களை விட்டு செல்ல வேண்டியதாகியிருக்கிறது.

சில அலுவலகங்கள் மாறும்போது சில ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள், சிலருக்கு முன்பை விட மிக குறைந்த நிலையிலுள்ள பணி வழங்கப்படிருக்கிறது. இப்படியாக மறைமுகமான முறைகளைப் பயன்படுத்தி மனோரீதியான அச்சத்தை ஏற்படுத்தி அடுத்து என்ன நடக்குமோ என்ற ஒரு விதமான கவலையை ஏற்படுத்தி துன்புறுத்தியுள்ளார்கள் நிறுவனதலைவரும், உயர் அதிகாரிகளும்.

தற்போது பாரீஸ் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. நிறுவன தலைவரான Lombardக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அவர் நான்கு மாதங்கள் மட்டும் சிறை சென்றால் போதும்.

அத்துடன், அவருக்கு 12,900 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் Louis-Pierre Wenes மற்றும் Olivier Barberot என்னும் இரு அதிகாரிகளுக்கும் இதே தண்டனையும் 64,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற நான்கு அதிகாரிகளுக்கு நான்கு மாதங்கள் சிறையும், 4,300 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அதிகாரிகள் அனைவரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு 2.57 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீர்ப்பைக் கேட்டு ஆறுதலடைந்துள்ள அதே நேரத்தில், சட்டம் முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ள Lombardஇன் வழக்கறிஞர், தாங்கள் அனைவரும் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்