பாரீஸ் வந்த விமானத்தை சோதனையிட்ட ஊழியர்கள்: சிறுவனின் உடலைக் கண்டு அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸ் விமான நிலையம் வந்தடைந்த விமானம் ஒன்றை வழக்கம்போல் சோதனையிட்ட விமான ஊழியர்கள், லாண்டிங் கியர் என்னும் சக்கரம் அமைந்திருக்கும் பகுதியில் சிறுவன் ஒருவனின் உடல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

லாண்டிங்க் கியர் என்பது, விமானம் புறப்பட்டதும் அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு வைக்கப்படும் பகுதியாகும்.

அங்கு மிகக்குறைந்த இடமே இருப்பதோடு, விமானம் புறப்பட்டதும் வெப்பநிலை பூஜ்யத்திற்கு கீழே சென்று விடுவதால் குளிர் வாட்டும்.

சரியாக மூச்சு விடுவதற்கு அங்கு போதுமான ஆக்சிஜனும் இருக்காது.

ஏற்கனவே ஒருவர் இப்படி ஒளிந்திருந்தபோது, உயிரிழந்து, லண்டன் மீது விமானம் பறக்கும்போது, விமானத்திலிருந்து ஒரு வீட்டுத்தோட்டத்தில் விழுந்தது நினைவிருக்கலாம்.

தற்போது, அதேபோல், பத்து வயது சிறுவன் ஒருவன் லாண்டிங் கியர் பகுதிக்குள் மறைந்திருந்தபோது பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

அவன் ஒரு ஆப்பிரிக்க சிறுவன் என உள்ளூர் பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன. Abidjanஇலிருந்து பிரான்ஸ் வந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

அந்த சிறுவன் யார், எப்படி சக்கரங்கள் இருக்கும் இடத்திற்குள் ஏறினான், எப்படி உயிரிழந்தான் என்பது போன்ற விடயங்கள் எதுவும் தெரியாத நிலையில், பொலிசார் விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்