ஆப்கனிலிருந்து உயிருக்கு தப்பி குழந்தையுடன் ஓடிவந்ததாக கூறிய நபர்: இரக்கப்பட்ட பிரித்தானியருக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தாலிபானுக்கு தப்பி உயிருக்கு பயந்து நான்கு வயது குழந்தையுடன் பிரான்சில் கலாயிஸில் அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்த ஒரு தந்தை மீது பரிதாபம் ஏற்பட்டது பிரித்தானியர் ஒருவருக்கு.

பிரான்சின் கலாயிஸ் பகுதிக்கு அருகிலுள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த ரெசாவின் மகள் ப்ரூ அஹமதியை பார்த்தவர்களுக்கெல்லாம் அவளைப் பிடித்துப்போயிற்று.

சிறு வயதில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் சிறிது காலம் வாழ்ந்தவர் யார்க்‌ஷையரைச் சேர்ந்த ராப் லாவ்ரி.

ஏற்கனவே 2015ஆம் ஆண்டு, ஆலன் குர்தி என்ற மூன்று வயது குழந்தை கடற்கரையில் இறந்து கிடந்த படம் பத்திரிகைகளில் வெளியானபோது, அதைக்கண்டு உலகமே அதிர்ந்ததுபோல, லாவ்ரியும் அதிர்ந்திருந்தார்.

ஆகவே, ஆலன் போன்ற அகதிகளுக்காக எதையாவது செய்யவேண்டும் என்ற எண்னம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது.

அப்போதுதான் பிரான்சில் அகதிகள் முகாமில் இருந்த ரெசாவையும் அவரது மகள் ப்ரூ அஹமதியையும் சந்தித்தார் லாவ்ரி.

பார்த்ததும் ப்ரூ அஹமதியை பிடித்து போயிற்று அவருக்கு. லாவ்ரியிடம், தான் உயிருக்கு பயந்து தன் குழந்தையுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடி வந்ததாகவும், தன் மனைவி இறந்துபோனாள், தன் ஆண் குழந்தையை உறவினர்கள் பார்த்துக்கொள்வதாகவும் கூறினார் ரெசா.

எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்து தன் மகள் ப்ரூ அஹமதிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதுதான் தன் நோக்கம் என்றும் கூறினார் ரெசா. அவர் மீதும் அஹமதி மீதும் இரக்கப்பட்ட லாவ்ரி, அவர்களை பிரித்தானியாவுக்கு கடத்தத் துணிந்தார்.

ஆனால், அவரது வாகனத்தில் போதுமான இடம் இல்லை என்று கூறி, அஹமதியை மட்டும் லாவ்ரியுடன் அனுப்பி வைத்தார் ரெசா.

இதற்கிடையில் லாவ்ரிக்கு தெரியாமல் இரண்டு எரித்ரிய அகதிகள் அவரது வேனில் ஏறிக்கொள்ள, எல்லோருமாக பொலிசாரின் மோப்ப நாய்களால் சிக்கிக்கொண்டனர். மனிதர்களை கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட லாவ்ரிக்கு, ஐந்தாண்டுகள் சிறையும் 30,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டது.

கணவர் என்ன செய்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாத மனைவி பிரிந்து செல்ல, பொலிசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டு, நற்பெயரையும் தொழிலையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார் லாவ்ரி.

இந்த வழக்கு உலகத்தின் கவனத்தை ஈர்க்க, ரெசாவும் சாட்சியமளிக்க முன்வர, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் லாவ்ரி.

இரக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நின்ற லாவ்ரிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

டென்மார்க்கிலிருந்து அழைத்த ஒரு தன்னார்வலர் ப்ரூ அஹமதியின் தாயையும் சகோதரியையும் தான் சந்தித்ததாகவும், அவளை பார்க்க அவர்கள் துடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குழம்பித் தெளிந்த லாவ்ரிக்கு, பின்னர்தான் எல்லாம் தெரியவந்துள்ளது. அதாவது, ரெசோ தாலிபான்களுக்கு தப்பி வரவும் இல்லை, அவரது மனைவி இறக்கவும் இல்லை, அவருக்கு இன்னொரு ஆண் குழந்தை இல்லவும் இல்லை.

தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று ஆசைப்பட்ட ரெசோ, மனைவியை விட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறார்.

குழந்தையைக் கண்டால் பரிதாபம் ஏற்படும் என்பதற்காக அஹமதியையும் உடன் அழைத்து வந்திருக்கிறார்.

தற்போது அஹமதியின் தாயும் சகோதரியும் அவளையும், அவளது தந்தையையும் சந்தித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தற்காலிகமாகவாவது நல்ல காலம் பிறந்திருக்கிறது.

ரெசோவின் புகலிட நிலையை உள்துறை அமைச்சகம் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இரக்கப்பட்ட லாவ்ரிதான் எல்லாவற்றையும் இழந்து தனியே நிற்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்