கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் கொண்டாட கூடிய பிரெஞ்சு மக்கள்: அரசு விதித்த தடை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் நதிக்கரைகளில் கூடிய மக்கள் சற்றும் சமூக விலகல் விதிகளை மதிக்காமல் கொண்டாடத் துவங்க, அரசு நதிக்கரைகளில் மதுபானம் அருந்துவதற்கு தடைவிதிக்க வேண்டியதாயிற்று.

எட்டு வாரங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் பாரீஸ்வாசிகள் Saint-Martin கால்வாய் மற்றும் Seine நதியின் கரைகளில் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அவர்கள் கொண்டாடத் துவங்க, வேறு வழியின்றி பொலிசார் அவர்களை கலைந்துபோகச் செய்ததோடு, நதிக்கரைகளில் மதுபானம் அருந்துவதற்கும் தடைவிதித்தனர்.

இதற்கிடையில், மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியிருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல், மாஸ்கும் அணியாமல் அவர்கள் கூடியதால் வருத்தமுற்ற உள்துறை அமைச்சர் Christophe Castaner, மக்கள் பொறுப்பற்று நடந்துகொண்டதாக கூறி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனால், நதிக்கரைகளில் மதுபானம் அருந்த தடை விதிக்கப்பட்டதுமன்றி, பூங்காக்களை திறப்பதற்கும் அவர் அனுமதி மறுத்துவிட்டார்.

கொரோனா தொற்று முடியவில்லை, வைரஸ் இன்னமும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது என்று கூறிய அவர், நேற்று வெளியான புகைப்படங்களிலிருந்து மக்கள் நடந்துகொண்ட விதம் தெரியவருகிறது, இது ஆபத்தானது என்றார்.

இதற்கிடையில் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டாலும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து 100 கிலோமீற்றருக்கு அதிக தூரம் செல்வதற்கு ஜூலை 10 வரை புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்