கொரோனா வந்து சில மாதங்கள்தான் ஆகின்றன... அதற்குள் கடலுக்கே ஏற்பட்டுள்ள பிரச்சினை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கொரோனா வந்து சில மாதங்கள்தான் ஆகின்றன, அதற்குள் மக்கள் பயன்படுத்திவிட்டு வீசியெறிந்த மாஸ்குகளும் கையுறைகளும் மத்திய தரைக்கடல் படுகையில் குப்பையாக குவிந்தாயிற்று!

பிரான்சின் Operation Clean Sea என்ற அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கடற்படுகை எப்படி கொரோனா குப்பைகளால் மாசுபட்டுள்ளது என்பதைக் காண முடிகிறது.

அந்த அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான Laurent Lombard அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து, இந்த ஆண்டு கொரோனாவுடன் நீங்கள் கடலில் குளிக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த புதுவகை மாசுவை தவிர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறும் Lombard, இது ஆரம்பம்தான் என எச்சரிக்கிறார்.

ஒரு பெரிய புயல் வரும்போது, நாம் பயன்படுத்திவிட்டு வீசி எறிந்த அத்தனை கையுறைகளும் மாஸ்குகளும் கடலுக்குள் சென்று சேரப்போகின்றன என்கிறார் அவர்.

நாம் இரண்டு மில்லியனுக்கும் அதிகாமான மாஸ்குகளை ஆர்டர் செய்திருக்கிறோம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும் என்று கூறும் அவர், விரைவில் மத்தியதரைக்கடலில் ஜெல்லி மீன்களைவிட அதிகம் மாஸ்குகள் குவிந்திருக்கும் ஒரு பெரிய அபாயம் நேரிடப்போகிறது என்கிறார்.

மாஸ்குகள் மண்ணோடு மண்ணாக மட்கிப்போக 400 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால், அவை சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்