ஒற்றைக் காது அறுபட்ட நிலையில் இறந்து கிடந்த குதிரைகள்... பிரான்சில் மர்மம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், குறைந்தது ஐந்து குதிரைகள், ஒரு குட்டிக்குதிரை மற்றும் ஒரு கழுதை ஆகிய விலங்குகள், ஒற்றைக் காது அறுபட்ட நிலையில் இறந்து கிடந்துள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில், Normandy பகுதியில், இரண்டு குதிரைகள் ஒற்றைக்காதறுபட்ட நிலையில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத துவக்கத்திலும் இதேபோல் இரண்டு குதிரைகள் இறந்துகிடந்தன. தொடர்ந்து விலங்குகளுக்கெதிராக நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் குறித்து பிரான்சில் பல பகுதிகளிலுள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் மாதம் 6ஆம் திகதி, Dieppe பகுதியில் பெண் குதிரை ஒன்று வலது காது முற்றிலும் நீக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்தது.

பிறகு, இரண்டு வாரங்களுக்குப் பின் Grumesnil பகுதியில் காது அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் தனது கழுதை இறந்து கிடந்தது கண்டு மனம் உடைந்துபோன அதன் உரிமையாளர், பொலிசில் புகார் செய்தார்.

அதேபோல் Seine-Maritime பகுதியிலும் இரண்டு குதிரைகள் இறந்துகிடந்த விடயம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இதேபோல் பிப்ரவரியிலிருந்து பல சம்பவங்கள் பிரான்சின் Moselle, Vendée, the Aisne மற்றும் Somme பகுதிகளிலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. உயிரிழந்த ஒவ்வொரு விலங்கின் காதும் முற்றிலும் அறுக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்தது.

இது சாத்தான் வணக்கத்தினரின் மதச்சடங்காக இருக்கலாம் என்று கருதும் அதிகாரிகள், அதே நேரத்தில் ஒரு பைத்தியக்காரத்தனமான இணைய சவாலுக்காக விலங்குகளின் காதுகளை யாரோ சிலர் அறுத்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்