கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் அவர்களின் பங்கைப் பாராட்டி, சுகாதார ஊழியர்களுக்கு 8 பில்லியன் யூரோ மதிப்பிலான ஊதிய உயர்வுகளை வழங்க பிரெஞ்சு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
நீண்ட ஏழு வாரங்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் திங்களன்று தொழிற்சங்கங்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரான்சில் கொரோனா பரவலின் போது சுகாதாரப் பணியாளர்கள் ஹீரோக்களாக கொண்டாடப்பட்டனர்.
ஆனால் அவர்கள் அங்கீகாரத்தை விட அதிகமாக விரும்பினர், மேலும் ஊதிய உயர்வு மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறந்த நிதியுதவி கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனிடையே, பேரணியில் ஈடுபட்டவர்கள் சமூக விலகலை பின்பற்றவில்லை என கூறி பொலிசாரால் பிழையும் விதிக்கப்பட்டது.
தற்போது அரசாங்கம் ஊதிய உயர்வு விவகாரத்தில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது, இதனால் சுகாதார ஊழியர்களின் ஊதியம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 183 யூரோ அளவுக்கு உயரும்.
பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தமானது, புதிய பிரெஞ்சு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸால் "நமது சுகாதார அமைப்புகளுக்கான வரலாற்று தருணம்" என்று பாராட்டப்பட்டது.
சம்பள உயர்வு தொகுப்பில் பெரும்பாலானவை செவிலியர்கள், முதியோர் இல்ல ஊழியர்கள் மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்களின் ஊதியத்தை உள்ளடக்கும் என தெரியவந்துள்ளது.