எரிசக்தி ஆராய்ச்சி தொடர்பாக துருக்கி- கிரீஸ் இடையே அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியில் தனது இராணுவ இருப்பை அதிகரிக்கப் போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
எகிப்துடன் கிரீஸ் கடல்வழி ஒப்பந்தம் ஒன்றை அறிவித்த பின்னர் இந்த வாரம் கிழக்கு மத்தியதரைக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் எரிசக்தி ஆராய்ச்சி மேற்கொள்ள ஆய்வு கப்பல் ஒன்றை துருக்கி அனுப்பியது.
இதன் விளைவாக துருக்கி-கிரீஸ் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளனன.
இதனிடையே இந்த வார தொடக்கத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சர்ச்சைக்குரிய பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை நிறுத்துமாறு துருக்கிக்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு பின்னரும் பதட்டம் அதிகரித்து வருவதால், கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புடன், எதிர்வரும் நாட்களில் கிழக்கு மத்தியதரைக் கடலில் பிரான்ஸ் இராணுவம் தனது இருப்பை தற்காலிகமாக வலுப்படுத்த முடிவு செய்துள்ளது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்று அறிவித்தார்.
இதைதொடர்ந்து, பிராந்தியத்தில் தனது இராணுவ இருப்பை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் இரண்டு ரஃபேல் போர் விமானங்களையும், கடற்படைக் கப்பலான ‘Lafayette’-வையும் கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அனுப்பும் என்று ஆயுதப்படை அமைச்சகம் தெரிவித்துள்ளது.