வெளிநாட்டிலிருந்து வந்து பிரான்சில் வாழும் ஒரு குடும்பத்தினர், தங்கள் மகள் ஒரு கிறிஸ்தவ இளைஞனை காதலித்ததற்காக அவளை மொட்டையடித்து அவமதித்துள்ளனர்.
போஸ்னியா நாட்டிலிருந்து அந்த இஸ்லாமியக் குடும்பம் 2017ஆம் ஆண்டு பிரான்சுக்கு வந்துள்ளது.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 17 வயது பெண், கிறிஸ்தவ இளைஞர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்துள்ளார்.
தன் குடும்பத்தில் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்படும் என்பது தெரிந்ததால், இம்மாதம் (ஆகத்து) 13ஆம் திகதி, வீட்டை விட்டு ஓடி அந்த 20 வயது இளைஞனுடன் வாழத்துவங்கியுள்ளார் அந்த இளம்பெண்.
நான்கு நாட்களுக்குப் பிறகு, இனி இரு குடும்பங்களும் சமரசமாகிவிடலாம் என்று முடிவு செய்து அந்த இளம்பெண்ணும் காதலரும், காதலரின் குடும்பத்துடன் அந்த இளம்பெண் வீட்டுக்கு வந்துள்ளார்கள்.
தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று அந்த ஜோடி நம்பி வந்த நிலையில், அந்த பெண்ணில் பெற்றோரும், அத்தையும் மாமாவும், அவளை தலையிலும் உடலிலும் மாறி மாறி மிதித்திருக்கிறார்கள்.
இதை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞர் அதிர்ந்துபோய் உடனே பொலிசாரை அழைக்க ஓடியிருக்கிறார்.
பொலிசார் வந்ததும், அந்த குடும்பம் அந்த பெண்ணை மறைத்துவைக்க முயன்றுள்ளது. அவர்களை மீறி அந்த பெண்ணைக் கண்டுப்பிடித்தபோது, அவ்லது தலை மொட்டையடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு பொலிசாரும் அந்த இளைஞர் குடும்பத்தினரும் அதிர்ந்துள்ளார்கள்.
அத்துடன் அவளது உடலில் காயங்களுடன், அவளது விலா எலும்பும் உடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த பெண்ணின் பெற்றோர், மாமா, அத்தை ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் இந்த செய்தி பரவ நாடே கொந்தளித்தது. குடியுரிமை அமைச்சர் Marlène Schiappa, அந்த குடும்பத்தை கடுமையாக விமர்சித்தார்.
அந்த இளம்பெண் அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவளது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin, அந்த குடும்பம் நாடு கடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று விமர்சித்துள்ள அவர், அவர்கள் மீது மிகக்கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்றும், அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் அத்தை மாமா ஆகியோர் வழக்கு முடிந்ததும் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.