பிரான்ஸ் முழுவதும் இதற்கு அனுமதி கிடையாது! புதிய கட்டுப்பாடு விதிகளை அறிவித்தார் பிரதமர்

Report Print Gokulan Gokulan in பிரான்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், பிரான்ஸில் இரவு 9 மணிக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 8.50 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுடன் பிரான்ஸ் ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பாரிஸ் பிராந்தியத்தில் வசிப்பவர்கள், லில்லி, கிரெனோபில், லியோன், ஐக்ஸ்-மார்சேய், மான்ட்பெல்லியர், ரூவன், துலூஸ் மற்றும் செயிண்ட்-எட்டியென் ஆகிய பகுதியில் வசிக்கும் மக்கள் வேலை அல்லது முன்பதிவு செய்த பயணங்களுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமல்லாது பிரான்ஸ் முழுவதும் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கொண்டாட்டங்கள், தனியார் சார்பில் நடத்தப்படும் கொண்டாட்டங்கள் என மக்கள் பங்குபெறும் அனைத்து விதமான கொண்டாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக காஸ்டெக்ஸ் கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவுகள் பொது இடங்களில் மற்றும் தனியார் இடங்களில் கூட்டங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்த 12,000 காவல்துறை அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்தார்.

முதல் முறையாக ஊரடங்கு உத்தரவை மீறும் குற்றவாளிகளுக்கு 135 யூரோ அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது மீறலுக்குப் பிறகு அபராதம் 3,750 யூரோவாக உயரும், குற்றவாளிகள் அதிகபட்சம் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிப்பார்கள் என்று டர்மனின் கூறியுள்ளார்.

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பிரான்ஸின் நிதி மந்திரி புருனோ லு மைர், பிரெஞ்சு நிறுவனங்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவினால் ஏற்படும் பாதிப்பினை குறைக்க உதவும் வகையில் 1 பில்லியன் யூரோ கூடுதல் நிவாரண நிதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

விருந்தோம்பல் துறையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான வருவாயை பெறுமாயின், அரசுக்கு செலுத்த வேண்டிய சில கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் புருனோ தெரிவித்துள்ளார்.

அதேபோல விருந்தோம்பல் துறையுடன், உணவகம் போன்ற துறைகளில் உள்ள நிறுவனங்களின் கடன்களுக்கான வட்டியை தாமதமாக பெறுவதற்கு கால அவகாசம் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸில் இதுவரை 33,146 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்