மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு: பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய் சுருங்குவதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் Stent என்னும் சிறு கருவியை இதயத்திலுள்ள இரத்தக்குழாய்களுக்குள் பொருத்தக்கூடிய ரோபோக்களை, 15 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப்பின் தயாரித்துள்ளது.

இதற்கு முன் மருத்துவர்கள்தான் மணிக்கணக்காக நின்று அறுவை சிகிச்சை மூலம் அந்த கருவியை பொருத்துவார்கள்.

அதில் பிரச்சினை என்னவென்றால், எக்ஸ் ரே கருவிகள் இதயத்திற்குள் நடப்பதைக் காட்டும் அதே நேரத்தில்தான் அவர்கள் இந்த பணியை செய்ய இயலும்.

நீண்ட காலம் எக்ஸ் ரே உடலில் படுவதால், மருத்துவர்களுக்கும் அவர்களுக்கு உதவும் மற்ற மருத்துவ பணியாளர்களுக்கும் புற்றுநோய் மற்றும் காட்ராக்ட் முதலான பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், பிரான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோ இருந்தால், பாதுகாப்பான கண்ணாடித்திரைக்குப் பின்னால் இருந்தே ரோபோக்களை கட்டுப்படுத்தி இந்த அறுவை சிகிச்சையை செய்ய இயலும்.

இந்த கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க அந்த நிறுவனம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறது.

அதற்காக பிரான்ஸ் மேற்கொள்ளும் முயற்சியில் சீன நிறுவனமான MicroPort என்ற நிறுவனம் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

அந்த நிறுவனம் Robocath நிறுவனத்தில் 40 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்