பிரான்சில் கருப்பினத்தவர் ஒருவரை பொலிசார் முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
வெளியாகியுள்ள அந்த 13 நிமிட வீடியோவில், பொலிசார் அந்த கருப்பினத்தவரை அடித்து நொறுக்குவதைக் காண முடிகிறது.
அந்த நபர் பெயர் Michel Zecler, அவர் ஒரு இசை தயாரிப்பாளர். அவர் மாஸ்க் அணியாமல் சென்றதற்காகவும், அவரிடம் கஞ்சா வாசனை அடித்ததாகவும், அவரிடம் கொஞ்சம் கஞ்சா இருந்ததாலும், அவரை பொலிசார் தாக்கியதாக கூறப்படுகிறது. தன்னைத் தாக்கும்போது பொலிசார் இனரீதியாக தன்னை விமர்சித்ததாகவும் Zecler புகாரளித்திருந்தார்.
இது குறித்து பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கருப்பினத்தவரான இசை தயாரிப்பாளர் ஒருவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோவை தான் பார்த்ததாகவும், அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், அது அவமானத்திற்குரிய விடயம் என்றும் கூறினார்.
பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டும் என்று கூறிய மேக்ரான், பிரான்சில் வெறுப்போ இனவெறியோ தழைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறினார் இந்நிலையில், Zeclerஐ தாக்கிய பொலிசார் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், 44 வயதுடைய மூத்த அதிகாரி ஒருவர் உட்பட இரண்டுபேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர், இருவர் ஜாமீனில் விடப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அந்த பொலிசாரில் மூவர் மீது இனரீதியான தாக்குதல் குற்றசாட்டும் பதிவு செய்யப்படவேண்டும் என பாரீஸ் விசாரணை அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்கள் தாக்குதல் அநியாயமானதுதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள அந்த பொலிசார், தாங்கள் பயத்தில் அவ்விதம் நடந்துகொண்டதாகவும், ஆனால், இன ரீதியாக தாங்கள் விமர்சிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், இப்போதுதான் பிரான்சில் பணியிலிருக்கும் பொலிசாரின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தாக்கிய பொலிசார் நால்வரின் புகைப்படங்களும் வெளியாவது சந்தேகமே என கருதப்படுகிறது.
