இறந்துபோனதாக அறிவித்த நீதிமன்றம்... தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடும் பிரான்ஸ் நாட்டுப் பெண்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
338Shares

பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தால் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறார்.

பிரான்சிலுள்ள Saint Joseph என்ற கிராமத்தில் வாழும் Jeanne Pouchain (58) என்ற பெண்ணின் பெயர் பிரான்ஸ் நாட்டு ஆவணம் எதிலும் இல்லை. காரணம் அவர் இறந்துபோனதாக நீதிமன்றம் ஒன்று அறிவித்துவிட்டதுதான்! Jeanne நடத்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஒரு பெண் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்ததையடுத்து, 2004ஆம் ஆண்டு, Jeanne அவருக்கு 12,470 பவுண்டுகள் இழப்பீடு வழங்க தொழிலாளர் நல ஆணையம் ஒன்று உத்தரவிட்டது.

அந்த பெண் வேலையிலிருந்து நீக்கப்பட்டதற்கு Jeanneஉடைய நிறுவனம் பொறுப்பல்ல என அவரது சட்டத்தரணி வாதிட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

பல விசாரணைகள், மேல் முறையீடுகளுக்குப் பிறகும் Jeanneஉடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த பெண் பணியாளரோ விடுவதாக இல்லை. தனது முதலாளியான Jeanneக்கு தான் அனுப்பிய கடிதங்கள் எதற்கும் பதிலில்லை என்றும், ஆகவே அவர் இறந்துவிட்டார் என்றும் தொழிலாளர் நல ஆணையத்திடம் தெரிவித்துள்ளார் அவர்.

ஆகவே, Jeanne இறந்துபோனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால், Jeanne தன் கணவர் மற்றும் மகனுடன் இணைந்து வங்கியில் வைத்திருக்கும் கூட்டு வங்கிக்கணக்கை பயன்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

அவரது அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் மருத்துவக் காப்பீடு அட்டை என எதையுமே Jeanneஆல் பயன்படுத்தமுடியாது.

அதனால், வாங்கிய கடனையும் செலுத்த முடியாமல் போகவே, Jeanneஉடைய காரை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனேயே வாழும் Jeanne, தான் உலகத்தில் இல்லை என்கிறார். நான் எதுவும் செய்வதில்லை, சும்மா வீடு வாசலில் உட்கார்ந்திருக்கிறேன் என சோர்வுடன் கூறும் அவர், தனது சட்டத்தரணி தொடர்ந்துள்ள வழக்கில் தனக்கு வெற்றி கிடைக்கும், எல்லாம் மாறும் என்ற ஒரே நம்பிக்கையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்