பிரான்சில் ஒரு சர்ச்சைக்குரிய சட்டம்... நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக, புதிதாக சட்டம் ஒன்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின்படி, இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பள்ளிகளை மூடுவதற்கும் பொலிசாருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

இந்த சட்டம் இஸ்லாமியர்களை அவமதிக்கும் நோக்கிலும், பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்ட அந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த சட்டத்தை ஆதரித்து 347 பேரும் எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இனி, அந்த மசோதா மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும். மேக்ரானின் கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் கீழவையில் அந்த சட்டம் அமோக ஆதரவைப் பெற்றாலும், மேலவையில் மேக்ரானின் கட்சியினர் பெரும்பான்மையினராக இல்லாததால் மேலவை வாக்கெடுப்பு முடிவுகள் என்ன ஆகும் என்று தெரியவில்லை.

பிரான்சில் இஸ்லாமியர்கள் பெருமளவில் வசித்தாலும், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்கிறார்களா என்பது குறித்த விவகாரம் பல ஆண்டுகளாக பிரிவினையை ஏற்படுத்திவந்துள்ள நிலையில், சமீப காலமாக இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ள சூழலில், அடுத்த ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தலும் வர இருக்கும் நிலையில், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குறிப்பாக பாரீஸில், வரலாற்று ஆசிரியர் Samuel Paty என்பவரை இஸ்லாமிய தீவிரவாதி ஒருவன் தலையை வெட்டி கொலை செய்தது, உலகில் பெரும் பரபரப்பையும், நாட்டு மக்களிடையே கடும் அச்சத்தையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்