பிரான்சில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?: அரசு அளித்துள்ள தகவல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

பிரான்சில் தற்போது சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை முடியும் வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பில்லை என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 8 உடன் பள்ளிகளுக்கு விடுமுறைக் காலம் முடிவுக்கு வரும் நிலையில், நாட்டில் கொரோனா நிலைமை மீண்டும் மோசமடைந்தாலொழிய புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் ஒன்று நடந்தது.

கூட்டத்துக்குப் பின் பேசிய அரசு செய்தித் தொடர்பாளரான Gabriel Attal, ஏற்கனவே உள்ள கொரோனா விதிகளில் புதிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவித்தார்.

என்றாலும், மக்கள் தொடர்ந்து விதிகளை மதிப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இப்போதிருக்கும் சூழல், விதிகளை நெகிழ்த்தும் வகையிலும் இல்லை, அதே நேரத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கொண்டாடும் அளவிலும் இல்லை என்றார் அவர்.

இதற்கிடையில், Moselle பகுதியில் ஒரே வாரத்தில் 300 பேருக்கு புதுவகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அது மக்கள் பயணிப்பதாலோ அல்லது ஒரு இடத்தில் பரவிய தொற்றோ அல்ல.

அப்படியிருக்கும் சூழலில், பள்ளிகள் திறந்தபின் பயணம் தொடங்கும் நிலையில், மீண்டும் கொரோனா பரவுமோ என மருத்துவர்கள் பதற்றமாக இருக்கிறார்கள்.

இந்த காரணத்தால், பிரான்சில் தற்போது அமுலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் வாரங்களில் நெகிழ்த்தப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

என்றாலும், அருங்காட்சியகங்கள் போன்ற சில கலாச்சார மையங்களை திறப்பது குறித்தும், சோதனை முயற்சியாக பாரீஸ் மற்றும் Marseilleஇல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்தும் அமைச்சர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்