பிரான்ஸ் இனப்படுகொலையை முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டது: வெளியாகியுள்ள ஆய்வுக் குழுவின் அறிக்கை

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

இனப்படுகொலையை பிரான்ஸ் முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டது என நிபுணர்கள் குழு ஒன்று தங்கள் ஆய்வுக்குப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ருவாண்டாவில் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள், சிறுபான்மையினரான துட்சி இனத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 800,000 பேரை படுகொலை செய்தார்கள். இந்த சதியில் பிரான்சுக்கும் பங்கு இருப்பதாக ருவாண்டா நாடு நீண்ட காலமாக பிரான்சைக் குற்றம் சாட்டிவந்தது.

1994 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 100 நாட்களில்

துட்சி இனத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 800,000 பேர் கொல்லப்பட்டார்கள். எந்த நாடும் வெளிப்படையாக அதைக் கண்டிக்கவில்லை.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ருவாண்டா இனப்படுகொலை தொடர்பில் பிரான்ஸ் மீதான குற்றச்சாட்டு குறித்து ஆராய்வதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன் 15 பேர் கொண்ட ஆணையம் ஒன்றை ஏற்படுத்தினார்.

அதன்படி முன்பு இரகசியமாக வைக்கப்பட்ட சில ஆவணங்களை அணுகும் உரிமையை அந்த ஆணையத்துக்கு வழங்கினார் மேக்ரான்.

அப்போது, முன்னாள் ருவாண்டா அதிபரான ஹூட்டு இனத்தைச் சேர்ந்த Juvénal Habyarimanaவுடன் நெருங்கிய உறவு வைத்திருந்த பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான François Mitterrandஉடைய சில ஆவணங்கள் அந்த ஆணையத்துக்கு கிடைத்தன.

1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, Habyarimanaவும் அவரது கூட்டாளியும் மற்றொரு ஹூட்டு இனத்தவருமான புருண்டி அதிபரான Cyprien Ntaryamiraவும் சென்ற விமானம் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டதில் இருவரும் பலியானார்கள்.

அவர்கள் உயிரிழப்புக்குக் காரணம் சிறுபான்மையினரான துட்சி இனத்தவரைக் கொண்ட புரட்சி அமைப்பு ஒன்றுதான் என்று கூறி, ஹூட்டு இனத்தவர்களால் துட்சி இனத்தவர்கள் வேட்டையாடப்பட்டார்கள்.

அப்போதுதான், துட்சி இனத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 800,000 பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டார்கள், நாட்டில் எங்கு பார்த்தாலும் இரத்த ஆறு ஒடியது, கண்ணில் கண்ட இடமெல்லாம் சவங்களாக காணப்பட்டன.

அந்த இனப்படுகொலையுடன் பிரான்சுக்கு தொடர்பு இருப்பதாக ருவாண்டா குற்றம் சாட்டி வந்த நிலையில்தான், பிரான்சுக்கும் அந்த இனப்படுகொலைக்கும் என்ன தொடர்பு என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான், இமானுவல் மேக்ரான் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தார்.

குறிப்பாக, அந்த ஆணையத்தில் உள்ள யாரும் ருவாண்டா நாட்டவர்கள் அல்ல, முதலாம் உலக மகா யுத்தத்தின்போது ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஆராய்ந்த, இனப்படுகொலை குறித்து ஆராயும் சர்வதேச குற்றவியல் சட்டம் அறிந்த நிபுணர்கள் அவர்கள்.

1994ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 22ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் அமைப்பு தென்மேற்கு ருவாண்டாவில் Operation Turquoise பிரெஞ்சுப் படைகளை இறக்கியது.

ஆனால், அந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இனப்படுகொலை செய்யும் கொலைகாரர்களிடமிருந்து அந்த பிரெஞ்சுப்படை சிலரை காப்பாற்றினாலும், அவர்கள் மிகவும் தாமதமாக வந்ததாகவும், அதனால் கொலைகாரர்கள் சிலர் தப்பிவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

2015ஆம் ஆண்டு, அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த François Hollande, ருவாண்டா தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்படும் என அறிவித்தாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, அவை இரகசியமாகவே வைக்கப்படும் என பிரான்ஸ் அரசியல் சாசன கவுன்சில் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வுக்குழுவின் அறிக்கை, ருவாண்டா இனப்படுகொலையை பிரான்ஸ் கவனிக்கத்தவறிவிட்டது என்றும், அந்த இனப்படுகொலை குறித்து பிரான்சுக்கு பெரிய பொறுப்பு உள்ளது என்றும், ஆனால், பிரான்சுக்கு அந்த இனப்படுகொலையில் பங்கில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை வரவேற்றுள்ள ருவாண்டா, தனது அறிக்கையை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்