ஜேர்மனி வணிகவளாக படுகொலை: கொலைகாரருக்கு துப்பாக்கி விற்ற நபர் கைது

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேர் இறப்பிற்கு காரணமான இளைஞருக்கு துப்பாக்கி விற்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு வட பகுதியில் அமைந்துள்ள மார்பர்க் நகரில் வைத்து குறிப்பிட்ட நபரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.

கடந்த ஜூலை 22 ஆம் திகதி முனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியா வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய டேவிட் Sonboly என்பவருக்கு தற்போது கைதாகியுள்ள நபர் துப்பாக்கி விற்றதாக உறுதி செய்துள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

அந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 9 நபர்கள் கொல்லப்பட்டதுடன் 36 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அந்த வணிக வளாகத்தில் இருந்து தப்பிய கொலைகாரனின் உடலை பின்னர் பொலிசார் கைப்பற்றினர்.

இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார், குறிப்பிட்ட நபர் பயன்படுத்தியது Glock துப்பாக்கி எனவும், இதை அவர் திருட்டுத்தனமாக வாங்கியிருக்க வேண்டும் எனவும் முடிவுக்கு வந்தனர்.

மட்டுமின்றி குறிப்பிட்ட துப்பாக்கியை இணையத்தில் வாங்கியிருக்க வாய்ப்புகள் இல்லை என்பதால், எவரேனும் நேரிடையாக கொண்டு சேர்த்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தனர்.

18 வயதேயான அந்த இளைஞனின் கொலைவெறி தாக்குதல் உள்ளிட்ட 3 வெவ்வேறு சம்பவங்கள் ஒரே வாரத்தில் பாவரியா பகுதியை கூண்டோடு உலுக்கியது. மட்டுமின்றி ஜேர்மனி முழுக்க எதிரொலித்த இச்சம்பவத்தின் பின்னரே பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக ஜேர்மனியில் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற தாக்குதலை முன்மாதிரியாக கொண்டு குறிப்பிட்ட இளைஞன் இந்த படுகொலையை நடத்தியிருக்கலாம் என பொலிஸ் தரப்பு கருதுகின்றது.

மேலும் நார்வேயில் தீவிர வலதுசாரி பயங்கரவாதி ஆண்டர்ஸ் ப்ரீவிக் 77 நபர்களை படுகொலை செய்த சம்பவத்தின் 5-வது ஆண்டும் ஒருசேர வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments