ஹிட்லர் மெழுகுச்சிலை: நீக்கியது இந்தோனீசிய அருங்காட்சியகம்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
109Shares
109Shares
lankasrimarket.com

இந்தோனீசிய அருங்காட்சியகம் ஒன்றில் பார்வையாளர்கள் `செல்ஃபி` எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த, ஆள் உயர ஹிட்லர் சிலை நீக்கப்பட்டுள்ளது.

ஆஸ்விட்ச் முகாமிற்கு முன்பு, ஹிட்லரின் சிலையோடு நின்று, மக்கள் சிரித்தவாறு செல்ஃபி எடுத்துகொள்ளுவது போன்ற புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன.

ஜாவா தீவில் உள்ள ஜோக்ஜகார்த்தாவில் உள்ள இந்த அருங்காட்சியகம், மக்களுக்கு அறிவூட்டவே விரும்பியதாக கூறுகிறது.

"நாங்கள் கோபத்தை ஈர்க்க விரும்பவில்லை" என்று, அருங்காட்சியகத்தின் மேலாளர் கேமி மிஸ்பாஹ், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

சமூக தளங்களில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களில், பலர் இந்த மெழுகுச்சிலையோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதை பார்க்க முடிகிறது.

அதில், ஆரஞ்சு நிற சீருடை அணிந்த ஒரு இளம் ஆண்கள் குழு, நாஜிக்கள் மரியாதை செலுத்துவது போல, அந்த மெழுகுச்சிலைக்கு மரியாதை அளிக்கும் புகைப்படமும் அடங்கும்.

இதுவரையில், இந்த சிலை நிறுவப்பட்டதற்காக எந்த பார்வையாளரும் புகார் அளிக்கவில்லை என்று அருங்காட்சியகம் தெரிவித்தாலும், இந்த சிலை, உலகளவில் பலரையும் மிக வருத்தமடைய செய்துள்ளது.

`தி சைமன் வீசண்டால் செண்டர்` என்ற யூத மனித உரிமைகள் அமைப்பை சேர்ந்த ரப்பி ஆப்ரகாம் கூப்பர், "இதில் உள்ள அனைத்துமே தவறாக உள்ளது. இது எந்த அளவிற்கு அலட்சியப்படுத்துதலாக உள்ளது என்பதை விவரிக்க வார்த்தைகள் எளிதில் கிடைக்கவில்லை" என்று ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

"சிலைக்கு பின்னால் உள்ள புகைப்படம் அருவறுப்பாக உள்ளது. அது, அந்த மையங்களுக்குள் சென்று, வெளியேறாமல் போனவர்களை கேலி செய்வது போல உள்ளது."

ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன அழிப்பு நடந்தபோது, ஆஸ்விட்ச் முகாமில், பெரும் அளவிலான ஐரோப்பிய யூதர்கள், ரோமா கிப்சிக்கள் மற்றும் சோவியத்தின் போர்க்கைதிகள் என கிட்டத்தட்ட 11 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சிலர், ஹோலோகாஸ்ட் குறித்த அறிவு மக்களுக்கு இல்லாமையே, இந்த சம்பவ்ம் குறித்த உணர்வுதிறன் குறைவாக இருக்க காரணம் என்று குற்றம்சாட்டினர்.

ஆனால், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆராய்ச்சியாளரான அண்ட்ரியாஸ் ஹர்சோனோ, உலகில் அதிக இஸ்லாமிய மக்களை கொண்ட நாட்டின், யூதர்களுக்கு எதிரான உணர்வை இது வெளிக்கொண்டு வந்துவிட்டது என்றார்.

ஜாவாவில் உள்ள பாண்டூங்கில், நாஜிக்களின் முறைகளை விளக்கும் வகையிலான ஒரு உணவு விடுதி மூடப்பட்ட பிறகு, ஓராண்டிற்கும் குறைவான காலகட்டத்தில்தான், இந்த சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

- BBC - Tamil

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்