யூத இனத்தவர் மீது ஹிட்லர் பெயரை கூறி இனவெறி தாக்குதல்: அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஜேர்மனி

லண்டனில் ஹிட்லர் பெயரை வைத்து யூத இனத்தவர் மீது வேன் ஓட்டுனர் இனவெறி தாக்குதல் நடத்திய நிலையில் பொலிசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

நாட்டின் ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, இது யூத மக்கள் அதிகளவில் வாழும் பகுதியாகும்.

அங்குள்ள வாகன நிறுத்ததில் யூத இனத்தவர் ஒருவர் இருந்தார், அருகில் வேனில் உட்கார்ந்திருந்த ஓட்டுனர் அவரிடம் கரீபியன் உச்சரிப்பில் இனவெறியை தூண்டும் வார்த்தைகளை பேசினார்.

அதாவது, ஹிட்லர் சிறந்த மனிதராக இருந்தவர், அவர் என்ன செய்தார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

இந்த உலகம் உனக்கு சொந்தம் என நீ நினைக்கிறாய், ஆனால் அது உனக்கு சொந்தம் கிடையாது.

இது ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியே தவிர இஸ்ரேல் கிடையாது, சரியா? என கூறியுள்ளார்.

இதன் பின்னர் வேனை ஓட்டி கொண்டு குறித்த நபர் சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஸ்டாம்போர்ட் ஹில்லின் யூத அயல் கண்காணிப்புக் குழு, இது சம்மந்தமான வீடியோவை பொலிசாரிடம் கொடுத்துள்ளது.

குழுவின் தலைவர் ரப்பி ஹெர்சேல் கூறுகையில், வீடியோவில் நபர் பயன்படுத்திய வார்த்தைகள் அருவருப்பானது, இதுபோல ஒருவர் பேசுவது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில், சம்பவம் குறித்து வந்த புகாரையடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், இதில் சம்மந்தபட்ட நபர் குறித்து தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்