ஜேர்மனியில் பேருந்து மற்றும் ரயில் கட்டணங்கள் உயர்கிறது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் இந்த வருடம் உயர்த்தப்பட இருப்பதாக போக்குவரத்துக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

டிக்கெட்டுகளின் விலை 1.5 முதல் 2 சதவிகிதம் வரை உயரலாம் என்று ஜேர்மன் போக்குவரத்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைவரான Jürgen Fenske செவ்வாயன்று பெர்லினில் தெரிவித்தார்.

கைமீறிப்போன செலவுகளை சமாளிப்பதற்காக டிக்கெட் விலைகளை சற்று உயர்த்தப் போவதாக அவர் தெரிவித்தார்.

பொதுச் சேவை ஊழியர்களுடன் அவர்களது ஊதியம் குறித்து நடைபெறவிருக்கும் பேச்சு வார்த்தைகளும் விலை உயர்வுக்கான ஒரு காரணம் என்று போக்குவரத்துக் கூட்டமைப்பு கூறுகிறது.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் மற்றும் வாகனங்களை இயக்குவதற்கான செலவும் போக்குவரத்துத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2017 ஆம் ஆண்டில் டிக்கெட் விலைகள் சராசரியாக 1.9 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உயர்த்தப்பட்டன.

கடந்த ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு படைத்தது: 10.3 பில்லியன் மக்கள் பஸ் போக்குவரத்தைப் பயன்படுத்தினார்கள். இது 2016ஐ விட 1.4 சதவிகிதம் அதிகம். போக்குவரத்து நிறுவனங்களின் வருவாயும் 3.3 சதவிகிதம் உயர்ந்தது.

இந்த நிறுவனங்கள் பல வளர விரும்புகின்றன, அவர்கள் தங்கள் வாகனங்களையும் பராமரிக்க வேண்டும், எனவே இந்த விலை உயர்வு இப்போது அவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது என்று Jürgen Fenske கூறினார்.

இன்னும் பலர் போக்குவரத்திற்கு கார்களையே பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் உட்கட்டமைப்புக் குறைபாடுகளால் பல இடங்களில் பொது போக்குவரத்து இல்லை. அங்கும் போக்குவரத்தை விரிவாக்க 15 பில்லியன் யூரோக்கள் தேவை என்று போக்குவரத்துக் கூட்டமைப்பு கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பஸ் பயணிகளின் எண்ணிக்கை 0.2 சதவிகிதம் குறைந்திருந்தது. கிராமப்புறங்களில் இணைப்புப் பேருந்து சேவை குறைவாக உள்ளதே இதற்குக் காரணம் ஆகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்