ஜேர்மனியில் இலவசமாக பயணம் செய்யலாம்: திட்டம் செயல்படுத்தப்படுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

"Car nation" என்று அழைக்கப்படும் ஜேர்மனி ஐரோப்பிய யூனியனால் நிர்ணயிக்கப்பட்ட மாசுக்கட்டுப்பாடு வரம்பை எட்டுவதற்காகவும் அபராதங்களைத் தவிர்ப்பதற்காகவும் கார்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்தது.

மாசுக்கட்டுப்படுக்கான காலக்கெடு ஜனவரி 30ம் திகதியுடன் முடிந்துவிட்டநிலையில், ஐரோப்பிய யூனியனின் சுற்றுச்சூழல் தலைவர் Vella சிறிது கால நீட்டிப்பை வழங்கி அதற்குள் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், சட்டப்பூர்வ நடவடிக்கையைச் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்துள்ளார்.

காற்று மாசின் அளவைக் குறைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஜேர்மனியின் முக்கியமான வருவாய்க்குக் காரணமான கார் தயாரிப்பு தொழிலில், Volkswagen போலியான முடிவுகளை வெளியிட்டு ஏமாற்றி மக்களின் கோபத்திற்கு ஆளானது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த இலவசப் பேருந்து திட்டத்தை செயல்படுத்த அரசு முயன்று வருகிறது.

ஐரோப்பிய யூனியனின் சுற்றுச்சூழல் கமிஷனர் Karmenu Vellaவுக்கு ஜேர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சர் Barbara Hendricks உட்பட மூன்று அமைச்சர்கள் எழுதிய கடிதத்தில், தனியார் கார்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் தாங்கள் இலவசப் பொதுப் போக்குவரத்தை ஏற்படுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற தாமதங்கள் எதுவுமின்றி காற்று மாசுக்கு எதிராகப் போராடுவதே ஜேர்மனியின் தலையாய நோக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் முன்னாள் தலைநகரமான Bonn மற்றும் தொழில்துறை நகரங்களான Essen மற்றும் Mannheim உட்பட மேற்கு ஜேர்மனியின் ஐந்து நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவும் இந்த நேரத்தில் எடுக்கப்பட உள்ள, இந்த முடிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது.

ஏற்கனவே Association of German Cities என்னும் அமைப்பின் தலைவரான Helmut Dedy, அரசாங்கம் எப்படி இந்தத் திட்டத்திற்கு நிதியளிக்கப் போகிறது என்பது குறித்த தெளிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எந்த நிறுவனத்தால் தேவையான பேருந்துகளைத் தயாரித்துக் கொடுக்க முடியும் என்று தெரியவில்லை என்று Bonnஇன் மேயரான Ashok Sridharan கருத்துத் தெரிவித்துள்ளார்.

மாசுக்கட்டுப்பாட்டின் நடவடிக்கைகளாக இலவசப் பேருந்து பயணம் மட்டுமின்றி பேருந்துகள் மற்றும் டாக்சிகளில் மாசுக் கட்டுப்பாடுகள் விதிப்பதோடு குறைந்த மாசு மண்டலங்களும் கார் பூலிங் போன்ற திட்டங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆனால் இதே போன்ற இலவசப் பேருந்து திட்டம் அமெரிக்க நகரமான Seattle உட்பட பல உலக நாடுகளிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்