பவேரிய மன்னரை வீழ்த்திய நடன மங்கை: மறக்கப்பட்ட கதை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
175Shares
175Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் வரலாற்றில் 150 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த மறக்கப்பட்ட கதை இது.

முனிச் நகரின் நேஷனல் தியேட்டரில் அன்று நடைபெற்ற அந்த நடனம் பவேரிய வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் என யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லோலா மோண்டஸ் என்னும் அந்த அழகிய நடன மங்கை தனது சிலந்தி நடனத்தால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தாள்.

ஒன்றன் மீது ஒன்றாக அவள் அணிந்திருந்த பல வண்ண உடைகளை ஒவ்வொன்றாக அகற்றி ஒரு சிலந்தி பூச்சியைத் தேடும் விதத்தில் அந்த நடனம் அமைந்திருந்தது.

அவள் உடைகளை அகற்றி கற்பனையான சிலந்திப்பூச்சிகளைக் கொல்லுவாள். இறுதியில் தோல் நிறத்தில் அமைந்த இடுப்பு வரை மட்டுமே நீண்ட ஒரு சிற்றாடையுடன் அவளது நடனம் முடிவடையும். பார்வையாளர்களில் ஒருவர் அவளது அந்த கவர்ச்சிகரமான தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தார்.

அவர், முதுமையை நோக்கி சென்று கொண்டிருந்த பவேரியாவின் மன்னர் முதலாம் லட்விக். ஸ்பெயின் நாட்டுப் பொருட்கள் மீது தீரா மோகம் கொண்டிருந்த அவர் அந்த நடன மங்கை மீது உடனடியாக காதலில் விழுந்தார்.

தான் எவ்வளவு பெரிய படுகுழிக்குள் விழுகிறோம் என்பதை அறியாத அந்த துரதிர்ஷ்டசாலி, லோலா என்னும் அந்த நடன மங்கை உண்மையில் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் என்பதையும், அவளிடம் நெருங்கிப் பழகும் எந்த ஆணும் அழிந்துபோவான் என்னும் மோசமான வரலாறு கொண்டவள் அவள் என்பதையும் அறியவில்லை.

அது அவருக்கு புரிய வரும்போது அவரது பதவி ஆட்டம் கண்டிருந்தது. அவளது வரலாற்றை இன்று ஜேர்மனி மறந்து போனது.

ஆனால் வரலாற்றாளர்கள், அவள் 19ஆம் நூற்றாண்டில் பவேரிய வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்தவள் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

சிறு வயதில் பல துன்பங்களுக்கு ஆளான அவள் இரண்டு விடயங்களைக் கற்றுக் கொண்டாள், அவை நடனமும் பிரெஞ்சு மொழியும்.

அவைதான் அவளை பின்னாளில் இவ்வளவு பிரபலமாக ஆக்கின என்று கூறலாம். இளவயது மண வாழ்வு தோல்வியில் முடிய, தனது கவர்ச்சி நடனத்தால் ஆண்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள ஆரம்பித்தாள் லோலா.

கடைசியாக அவள் வலையில் வீழ்ந்தவர்தான் மன்னர் முதலாம் லட்விக். தனது உடல் அழகைக் காட்டி மன்னரை மயக்கிய லோலாவுக்காக மன்னர் பரிசுகளைக் குவித்தார், மாட மாளிகைகளைக் கட்டினார்.

ஒரு கட்டத்தில் கஜானாவின் பெரும்பகுதி லோலாவின் செலவுக்கே சென்றது. அது மட்டுமின்றி மெல்ல பவேரிய அரசியலில் தலையிட் ஆரம்பித்தாள் லோலா.

தனது வலது கையில் ஒரு பெரிய நாயைப் பிடித்துக் கொண்டு இடது கையில் சாட்டையையும் பிடித்துக் கொண்டு முனிச் நகர வீதிகளில் நடை பயில்வது அவளது வழக்கம்.

இதனால் மக்கள் வெறுப்படைந்தனர், கலவரங்கள் ஏற்பட்டன, என்றாலும் அவளது அழகு மன்னரின் கண்ணை மறைத்ததால் மன்னர் அவளை ஆதரிப்பதை விடவில்லை.

அவளை பவேரிய குடிமகளாக ஆக்கி விடலாம் என்றார் அவர். மறுப்பு தெரிவித்த அமைச்சர்களின் பதவி பறிபோனது. லோலா தனக்கு ஆதரவாக மாணவர்களைச் சேர்த்துக் கொண்டாலும் அவளுக்கு எதிர்ப்பு வலுத்தது.

இதற்கிடையில் தனது ஆதரவாளர்களில் ஒருவருடன் லோலாவுக்கு தவறான உறவும் ஏற்பட, நாட்டில் கலவரம் வெடித்தது. மன்னர் எடுத்த முடிவுகள் அவருக்கே எதிராக திரும்பின.

லோலாவை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டு மன்னர் பதவியையும் தனது மகனுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு சிம்மாசனத்தை விட்டு இறங்கினார் மன்னர். ஆனால் லோலா அடங்கவில்லை.

பலரையும் தன் அழகால் மயக்கி தனது ஆடம்பர மற்றும் அபாயகர வாழ்வைத் தொடர்ந்த லோலாவின் வாழ்வின் முடிவு மோசமாக இருந்தது, ஆம், அவள் சிபிலிஸ் என்னும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஏற்படும் மோசமான நோயால் உயிரிழந்தாள்.

ஜேர்மனி வரலாற்றில் ஒரு மன்னரின் அழிவுக்கே காரணமாக இருந்த ஒரு நடன மங்கையின் கதை மறக்கப்பட்டு போனது ஆச்சரியம்தான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்