ஈரான் பணப்பரிமாற்றம் குறித்து ஜேர்மனி எடுக்கவுள்ள முடிவு: புயலைக் கிளப்புமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
109Shares
109Shares
lankasrimarket.com

ஜேர்மனியிலிருந்து ஈரானுக்கு பல கோடிக்கணக்கான யூரோக்களை பணப்பரிமாற்றம் செய்ய ஈரான் அரசு முடிவெடுத்துள்ளது தொடர்பாக ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு பணப்பரிமாற்றம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டால், அது அமெரிக்காவை எரிச்சலூட்டும், அதனால் அமெரிக்கா கடுமையாக பதில் நடவடிக்கை எடுக்க நேரிடலாம்.

பிரச்சினைக்குரிய ஈரானுக்கு சொந்தமான அந்த 300 மில்லியன் யூரோக்கள் ஜேர்மனியின் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டு ஐரோப்பிய ஈரானிய வர்த்தக வங்கியில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா விதித்துள்ள தடைகள் ஆகஸ்டு மாதம் மீண்டும் அமுலுக்கு வருவதைத் தொடர்ந்து தங்கள் கணக்குகள் முடக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஈரான் முடிந்த வரையில் விரைவாக தனது பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்புகிறது.

ஆனால் அவ்வாறு நடந்தால், அது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே ஜேர்மனிக்கான அமெரிக்க தூதர் Richard Grenell, அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்விடயத்தை மிகவும் கவனமாக கவனித்து வருவதாகவும், ஜேர்மனியை அவ்விடயத்தில் தலையிட்டு அத்திட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பரிமாற்றம் செய்யப்படும் அந்தப் பணம், கிரெடிட் கார்டு இல்லாமல் வெளி நாடு செல்லும் ஈரானியர்களுக்கு பணம் தேவைப்படும்போது உதவுவதற்காக வழங்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையில் இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றால், ஜேர்மனி வரலாற்றிலேயே அது மிகப் பெரிய பணப்பரிமாற்றங்களில் ஒன்றாக இருக்கும் என ஜேர்மனி நிதி அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போதைய விசாரணையானது, இந்த பணப்பரிமாற்றம் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் தடைகளை மீறுவதாக கருதப்படுமா என்பதை முடிவு செய்வதற்காக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், அதில் குறுக்கிட வேண்டுமானால் சட்ட விரோத நடவடிக்கை குறித்த பலமான ஆதாரம் தேவை என்றும் தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்த பணப்பரிமாற்றத்தை ஜேர்மனி தடுக்குமானால், அதுவும் மிகப்பெரும் சர்வதேச அரசியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும், ஏனெனில் அவ்வாறு நடைபெற்றால், அது ஈரான் அணு ஒப்பந்தம் செயலிழந்து போனதற்கு சமமாக கருதப்படும்.

அது நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்