இன்னும் மிச்சமிருக்கும் பெர்லின் சுவர்: அபூர்வ கண்டுபிடிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

1961 முதல் 1989 வரை ஜேர்மனியை இரண்டாகப் பிரித்திருந்த பெர்லின் சுவர் 1992ஆம் ஆண்டு முற்றிலுமாக இடித்துத் தள்ளப்பட்டது.

அகதிகள் வருகையைத் தடுப்பதற்காக என்ற பெயரில் கட்ட தொடங்கப்பட்ட அந்த சுவர் பல குடும்பங்களை பிரித்தது.

மேற்கு ஜேர்மனியில் வேலை செய்த பல கிழக்கு ஜேர்மானியர்கள் வேலை இழந்தனர்.

இந்நிலையில் 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி “சுவர் மரங்கொத்திகள்” என்று அழைக்கப்படும் ஒரு கூட்டத்தினர் பெர்லின் சுவரை இடிக்கத் தொடங்கினர்.

மக்களின் பெருத்த ஆரவாரத்திற்கிடையே நடைபெற்ற அந்த நிகழ்வை பல தொலைக்காட்சிகள் உலகமெங்கும் ஒளிபரப்பின.

பல்வேறு நாடுகளில் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்விற்கு ஆதரவு மட்டுமின்றி எதிர்ப்பும் கிளம்பியது என்றாலும் 1990ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி கிழக்கு ஜேர்மனி ராணுவமே அதிகாரப்பூர்வமாக பெர்லின் சுவரை இடிக்கத் தொடங்கியது.

பிரிந்த குடும்பங்கள் பல இணைந்தன, உறவினர்கள் கண்ணீர் மல்க ஒன்றிணைந்தனர்.

புகழ் பெற்ற அந்த வரலாற்று நிகழ்வு இன்னும் பலரது மனங்களிலும் இருந்து மறையாத நிலையில் சமீபத்தில் பெர்லின் சுவரின் இடிக்கப்படாத ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Ephraim Gothe என்னும் கவுன்சிலர் தனது பகுதி வாக்காளர்களை சந்திப்பதற்காக Berlin-Mitte என்னும் பகுதிக்கு சென்றார்.

அப்போது அவர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கண்டுபிடிப்பை தான் மேற்கொள்ளப்போவதை அறிந்திருக்கவில்லை.

பயன்பாட்டில் இல்லாத Südpanke-Park என்னும் பூங்கா பகுதிக்கு அவர் வந்தபோது புதர்களுக்குள் மறைந்திருந்த அந்த மறக்கப்பட்ட பெர்லின் சுவரின் ஒரு பகுதியை அவர் தற்செயலாக கண்டு பிடித்தார்.

மாபெரும் அந்த கண்டுபிடிப்பால் தான் மிகவும் ஆச்சரிமடைந்ததாக Ephraim Gothe தெரிவித்தார்.

உடனடியாக அந்த சுவர் வரலாற்று நினைவிடமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. 20 மீற்றர் நீளமுள்ள அந்த சுவர் ஜேர்மனியின் உளவுத்துறை தலைமையகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்