ஜேர்மனியில் அகதிகளின் கடைசி நம்பிக்கை: புகலிடம் அளிக்கும் தேவாலயங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

புகலிடம் மறுக்கப்பட்ட ஈராக் நாட்டைச் சேர்ந்த ஒரு கூட்டம் யாசிடி அகதிகளுக்கு ஜேர்மன் கான்வெண்ட் ஒன்றின் தேவாலயம் ஒன்று கடைசி நம்பிக்கையை அளிக்கும் விதமாக புகலிடம் அளித்து வருகிறது.

2015ஆம் ஆண்டு, எப்படியாவது அகதிகளுக்கு உதவ வேண்டும் என்பது எங்களுக்கு தெளிவாக விளங்கிற்று என்று கூறும் கன்னியாஸ்திரீயான Stephanie, ஈராக்கின் Sinjarஇலுள்ள யாசிடி மக்கள் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியிருந்த நிலையில் தனது கான்வெண்ட் ஏன் அகதிகளுக்கு தனது கதவுகளை திறந்து விட்டது என்பது விளக்குகிறார்.

2014ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சுமார் 3000 யாசிடிகள் கொல்லப்பட்டதாகவும் 6000 பேர் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த அகதிகள் பல துயரங்கள் வழியாக கடந்து வந்தவர்கள் என்பது நன்றாகத் தெரிவதால் நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம், எங்களிடம் நூற்றுக்கணக்கான பேருக்கு புகலிடம் வழங்குமளவிற்கு வசதி இருந்தால், நூற்றுக்கணக்கானவர்களுக்கு புகலிடம் வழங்கியிருப்போம் என்று கூறும் சிஸ்டர் Stephanie, இன்னும் அடைக்கலம் கோரி ஏராளமான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.

1983ஆம் ஆண்டு பெர்லினிலுள்ள தேவாலயம் ஒன்று துருக்கிய அகதியான Cemal Kemal Altunக்கு அடைக்கலம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து ’ஜேர்மானிய தேவாலய அடைக்கலம் அளித்தல் இயக்கம்’ தொடங்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு, இந்த பாரம்பரியத்தின்படி தேவாலயத்திற்கும் ஜேர்மன் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஃபெடரல் அலுவலகத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி நாடு கடத்தப்படும் அறிவிப்புகள் மறு பரிசீலனையிலிருக்கும்போது தேவாலயம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை அரசாங்கம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

பதிலுக்கு தேவாலயங்கள் தாங்கள் யாருக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள் என்பதைக் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தேவாலய அடைக்கலம் கொடுத்தல் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று அல்ல என்றாலும் தண்டனைக்குரிய ஒன்றும் அல்ல, எனவே அடைக்கலம் கோருவோரோ அல்லது அடைக்கலம் கொடுப்போரோ தண்டிக்கப்படுவதில்லை.

நள்ளிரவில் யாரும் பார்க்காத நேரத்தில் கூட அதிகாரிகள் வந்து செல்லக்கூடிய ஒரு அகதிகள் முகாமை விட இங்கு அவர்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்கிறார் சிஸ்டர் Stephanie.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers