லிபியாவின் பிடியில் 10,000 அகதிகள்: துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படும் பரிதாபம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்கில் கடல்வழிப் பயணம் மேற்கொள்ளும் அகதிகள் 10,000 பேரை லிபிய கடலோரக் காவல் படை மீட்டுள்ளதாக தகவல்வந்துள்ள நிலையில், மீட்கப்படும் அகதிகள் காத்திருப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு பாலியல் வன்முறை, சித்திரவதைகள் மற்றும் கட்டாய வேலை வாங்குதல் போன்ற துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் சிக்கித் தவித்த 10,000 பேரை இந்த ஆண்டின் முதல் பாதியில் லிபிய கடலோரக் காவல் படை மீட்டுள்ளதாக ஜேர்மனி அரசு இன்று தெரிவித்தது.

ஐரோப்பாவுக்குள் நுழையும் அகதிகளைத் தடுக்க இன்னும் அதிக நடவடிக்கைகள் எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் லிபியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஆனால் லிபிய கடலோரக் காவல் படையால் பிடிக்கப்படும் அகதிகள் பெரும்பாலும் காத்திருப்பு மையங்கள் எனப்படும் சிறைகளைச் சென்றடைவதாகவும், அங்கு அவர்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சியான இடதுசாரிக் கட்சியின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் விதமாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

லிபிய கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்த காத்திருப்பு மையங்கள் எனப்படும் சிறைகளில் அடைக்கப்படும் அகதிகள் நடத்தப்படும் விதம் குறித்து ஏற்கனவே மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்த காத்திருப்பு மையங்கள் எனப்படும் சிறைகளில் அதிகாரப்பூர்வமாக அடைக்கப்படாத பலர் உட்பட பெரும்பாலானோர், பாலியல் வன்முறை, சித்திரவதைகள் மற்றும் கட்டாய வேலை வாங்குதல் போன்ற துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுவதாக அவை தெரிவிக்கின்றன.

லிபிய கடலோரக் காவல் படையுடன் இணைந்து ஜேர்மன் அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றியமும், பிடிக்கப்படும் அகதிகள் மனிதத்தன்மையற்ற சூழலுக்கு கொண்டு செல்லப்படுவதை வேடிக்கை பார்க்கின்றன என்று இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரான Ulla Jelpke குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் லிபிய காத்திருப்பு மையங்களில் நிலவும் மனித உரிமை சூழல் மற்றும் லிபிய கடலோரக் காவல் படைக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஆகியவை குறித்த கேள்விகளுக்கு ஜேர்மன் அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்