மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்த விமானம், மூன்று பேர் பலி: ஜேர்மனியில் சோக சம்பவம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் விமானதளம் ஒன்றை ஒட்டிய சாலையில் நின்ற மக்கள் கூட்டத்தில் சிறிய விமானம் ஒன்று பாய்ந்ததில் ஒரு சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Fulda நகருக்கருகே Wasserkuppe மலைப்பகுதியில் அமைந்துள்ள விமானதளத்தின் அருகே அமைந்துள்ள சாலையில் கூட்டமாக நின்ற மக்கள் மீது சிறிய விமானம் ஒன்று மோதியதில் இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்ததால் மீண்டும் உயர எழும்ப முயன்ற அந்த விமானம் விமான நிலையத்தின் வேலியை உடைத்துக் கொண்டு மறுபக்கம் இருந்த சாலையில் சென்று நின்றது.

சம்பவத்தில் விமானத்தில் இருந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மூவரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

விமானி மற்றும் மூன்று பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம் தனியாருக்கு சொந்தமானதாகும். சீதோஷ்ணம் சீராக இருந்தும் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்