ஜேர்மானிய வீரர்களுடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்ததால் பழி வாங்கப்பட்ட 50,000 பெண்கள்: 70 ஆண்டுகளுக்குப் பின் வெளியான உண்மை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மானிய வீரர்களுடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்த சுமார் 50,000 நார்வே நாட்டுப் பெண்கள் அதற்காக பழிவாங்கப்பட்ட செய்தி, போர் முடிந்து 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில் தற்போது வெளிவந்துள்ளது.

நேற்று நார்வேயின் பிரதமரான Erna Solberg, இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மானிய வீரர்களுடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்ததற்காக பழி வாங்கப்பட்ட பெண்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாக அறிவித்ததையடுத்து இந்த உண்மை வெளிவந்திருக்கிறது.

சுமார் 30,000 முதல் 50,000 நார்வே நாட்டைச் சேர்ந்த, ’ஜேர்மானிய பெண்கள்’ என பட்டப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்ட இளம்பெண்கள், இரண்டாம் உலகப்போரின்போது நார்வேயில் முகாமிட்டிருந்த ஜேர்மன் ராணுவ வீரர்களுடன் அந்தரங்க உறவு வைத்திருந்தார்கள்.

1945ஆம் ஆண்டு நார்வே நாஸி கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்ற பின்னர், இந்த பெண்களை நார்வே அரசு குறிவைத்து பழி வாங்கியது.

சட்ட விரோத கைது, சிறையிலடைப்பு, வேலை பறிப்பு என பல தண்டனைகள் வழங்கப்பட்டதோடு, பலரது குடியுரிமைகளும் பறிக்கப்பட்டன.

நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 70ஆவது ஆண்டு நினைவு நாளை நினைவு கூறும் வகையில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ‘ஜேர்மன் ராணுவ வீரர்களுடன் அந்தரங்க உறவு வைத்திருந்த அல்லது வைத்திருந்ததாக கருதப்பட்ட நார்வேயின் இளம்பெண்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவு மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என்று கூறிய நார்வேயின் பிரதமரான Erna Solberg, இன்று அரசின் பெயரால் நான் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன்’ என்று தெரிவித்தார்.

இரண்டாம் உலகப்போர் முடிந்து 70 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி, பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் இறந்து, வெகு சிலரே உயிரோடு இருக்கும் நிலையில், இந்த மன்னிப்பினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்றே கூறலாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்