குழந்தைகள் உணவில் விஷம் கலந்த நபர்: அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானியர் ஒருவர் பணத்திற்காக குழந்தைகள் உணவில் விஷம் கலந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

54 வயதுடைய அந்த நபர் ரசாயனம் ஒன்றை குழந்தைகள் உணவில் கலந்ததோடு, அவற்றை அடையாளம் கூற வேண்டுமானால் சுமார் 12 மில்லியன் யூரோக்கள் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு கொடுக்காவிட்டால் மேலும் பல உணவுகளில் விஷம் கலக்கப்படும் என்றும் சூப்பர் மார்க்கெட்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

Friedrichshafen நகரிலுள்ள சூப்பர் மார்க்கெட்களில் ஐந்து உணவு ஜார்களில் விஷம் கலந்த அந்த நபர் பின்னர் அதிகாரிகளுக்கு உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் கொடுத்தார்.

நாடு முழுவதும் உணவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தையடுத்து, உணவு தரக் கட்டுப்பாடு சோதனைகள் முடுக்கி விடப்பட்டன.

அதிர்ஷ்டவசமாக அந்த ஐந்து ஜார்களும் விற்பனையாவதற்கு முன்னரே அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றினர்.

அவற்றை பரிசோதித்ததில் அந்த உணவு பொருட்களில் ஒரு குழந்தையைக் கொல்லும் அளவிற்கு ethylene glycol என்னும் ரசாயானம் கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

CCTV கெமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் கைப்பற்றப்பட்ட உணவு ஜார்களில் கண்டு பிடிக்கப்பட்ட DNA ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளியைப் பொலிசார் கைது செய்தனர்.

கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு பன்னிரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசாரிக்கும்போது தனக்கு மன நல பிரச்சினைகள் இருப்பதாகவும், உணவில் விஷம் கலக்கும்போது மதுபானம் அருந்தியிருந்ததோடு வலி நிவாரணி மருந்துகளும் சாப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அவரை பரிசோதித்த மன நல மருத்துவர் ஒருவர், செய்த குற்றங்களுக்கு பொறுப்பேற்கும் அளவிற்கு குற்றம் சாட்டப்பட்டவர் மன நலத்துடன் இருப்பதாக சான்றளித்ததையடுத்து நீதிமன்றம் அவரது கூற்றை நிராகரித்தது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers