தகவல் தொடர்பு துறை ஜாம்பவனான கூகுளையே மிரள வைத்த ஜேர்மன் நகரம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரம் ஒன்று தங்கள் நகரத்தில் அலுவலகம் ஒன்றை திறக்க திட்டமிட்ட இணைய ஜாம்பவானான கூகுளையே தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளச் செய்துள்ள ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜேர்மன் நகரமான Kreuzbergஇல் தொழில் துவங்குவோருக்கு பயிற்சியளிக்கும் அலுவலகம் ஒன்றை திறக்க கூகுள் முடிவு செய்தது.

இந்த தகவல் வெளியானதையடுத்து, அதற்காக தேர்வு செய்யப்பட்ட கட்டிடத்தை ஆக்கிரமித்த சமூக நல ஆர்வலர்கள், வரி ஏய்ப்பு செய்தல் மற்றும் தனிப்பட்ட தகவல்களை முறையற்ற வகையில் பயன்படுத்தக்கூடிய தீய செயல்கள் புரியும் கூகுள் ஒரு நல்ல அயலகத்தார் அல்ல என்று கூறி, அந்த இடத்தில் கூகுள் அலுவலகம் திறப்பதற்கெதிராக போராட்டம் நடத்தினர்.

அது மட்டுமின்றி கூகுள் தங்கள் நகரத்தில் அலுவலகம் திறப்பதால், வீடுகளின் விலை மற்றும் வாடகை உயரும் என்ற அச்சமும் அவர்களது எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்தது.

அதற்கேற்றாற்போல் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, 2016க்கும் 2017க்கும் இடையில் வீடுகளின் விலை பெர்லினில் 20 சதவிகிதம் அதிகரித்ததாகவும், Kreuzbergஇலோ அதே காலகட்டத்தில் 71 சதவிகிதம் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளது.

போராட்டத்தால் பின்வாங்கிய கூகுள் நிறுவனம் எதிர்ப்புகள் தங்கள் திட்டங்களை மாற்ற முடியாது என்று அறிக்கை விட்டாலும், உள்ளூர் மனித நேய அமைப்புகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய பிறகு அந்த இடத்திற்கான சரியான தீர்வைக் கண்டு பிடித்துள்ளதாக பின்னர் தெரிவித்தது.

அதாவது, அதே இடத்தில் இனி இரண்டு தொண்டு நிறுவனங்கள் செயல்பட உள்ளன. Betterplace என்னும் ஆன்லைன் டொனேஷன் தளமும், Karuna என்னும் குழந்தைகளை ஆதரிக்கும் தொண்டு நிறுவனமும் அந்த கட்டிடத்தில் இருந்து செயல்பட இருக்கின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers