ஜேர்மனியின் அடுத்த சேன்ஸலர் யார்: கட்சி இன்று கூடி முடிவெடுக்கும்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென்றும், கட்சி தலைமையிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்துள்ள நிலையில், இன்று கட்சியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அவரது கட்சியினர் கூடுகின்றனர்.

தலைமைக்கான போட்டியில் ஏஞ்சலாவின் ஆதரவாளர் ஒருவரும் எதிர்ப்பாளர் ஒருவரும் உட்பட மொத்தம் மொத்தம் மூவர் களத்தில் உள்ளனர்.

CDU கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஏஞ்சலா, 2021வரை சேன்ஸலராக நீடிக்க திட்டமிட்டுள்ளார். என்றாலும், அதற்கு முன்னரே தேர்தல் அறிவிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

பொதுவாக முக்கிய ஜேர்மன் கட்சிகள் தங்கள் தலைவரை ஏகமனதாக தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம், இந்நிலையில், நீண்ட காலத்திற்குப்பின் இம்முறை கட்சித் தலைமைக்கு மூவர் வெளிப்படையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் உள்ள மூவரில், கட்சியினருக்கு பிடித்தமான இருவருக்கிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியில் ஜெயிப்பவர்கள் தானாகவே ஜேர்மனியின் சேன்ஸலராக ஆகிவிடமுடியாது, அவர்கள் பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டும், மக்கள் தங்கள் சேன்ஸலரை தேர்ந்தெடுப்பார்கள்.

கட்சியில் பிரபலமானவர்களாகிய இருவரில் ஒருவர் CDUவின் பொதுச் செயலரான Annegret Kramp-Karrenbauer, இவர் ஏஞ்சலாவின் அபிமானத்தைப் பெற்றவர். இன்னொருவர் Friedrich Merz, இவர் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் முன்னாள் தலைவர்.

மூன்றாவது நபர் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn, இவர் ஏஞ்சலாவை விமர்சிப்பவர்.

போட்டியிலிருக்கும் மற்ற இருவரும் 50 வயதைக் கடந்தவர்கள், ஆனால் Jens Spahn மட்டும் 38 வயதே ஆனவர்.

கட்சியின் தலைமையை தேர்ந்தெடுப்பதற்காக Hamburgஇல் 1001 முழு நேர மற்றும் பகுதி நேர அரசியல்வாதிகள் கூடி முடிவெடுக்க உள்ளனர்.

இந்நிலையில் நேற்று பேட்டியளித்த ஏஞ்சலா மெர்க்கல், 18 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம் என்று கூறியுள்ளதோடு, கடந்த 18 ஆண்டுகளில் CDU பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது, அதே நேரத்தில் தொடர்ந்து நான்கு முறை வெற்றியும் பெற்றுள்ளது என்றார்.

கடந்த வந்த பாதைக்காக நன்றியுடையவளாக இருக்கிறேன் என்று கூறிய ஏஞ்சலா, ஒரு சேன்ஸலராக தொடர்ந்து பணியாற்ற இயன்றதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் கூறினார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers