ஜேர்மனியில் 12 பேர் மீது தாக்குதல்: அகதிகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் Amberg ரயில் நிறுத்தத்தில் நான்கு அகதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 13 முதல் 42 வயதுக்குட்பட்ட 12 பேர் காயமடைந்தனர்.

புத்தாண்டுக்கு முந்தைய இரவு 50 வயது மதிக்கத்தக்க ஜேர்மானியர் ஒருவர் அயல் நாட்டவர்கள் கூட்டமாக நின்ற இடத்தில் வேண்டுமென்றே காரை செலுத்தியதில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில், இது அதற்கு பழிவாங்குவதற்காக அகதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில் Ambergஇல் நடந்துள்ள சம்பவங்கள் தன்னை வருத்தமடையச் செய்திருப்பதாக தெரிவித்துள்ள ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer, புகலிடம் கோருவோர் வன்முறைக்குற்றங்களில் ஈடுபட்டால், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறியுள்ளார்.

இன வெறுப்பு முழக்கங்கள் எழுப்பிய சிலர் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் Amberg இரயில் நிறுத்தத்தில் திடீரென தாக்குதல்கள் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நான்கு அகதிகள், பவேரிய நகரமான Amberg ரயில் நிறுத்தத்தில் போவோர் வருவோர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

சம்பவங்களைக் கண்ணால் கண்ட ஒருவர், 17 வயது இளைஞர் ஒருவர் படிக்கட்டுகளிலிருந்து தள்ளி விடப்பட்டதாகவும், தலையில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்திய அந்த நபர்கள் அவ்விடம் விட்டு ஓடும்போது, அவ்வழியே வந்த மேலும் இருவர் மீதும் தாக்குதல் நிகழ்த்தினர்.

தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் 17 முதல் 19 வயதிற்குட்பட்ட நான்கு அகதிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers