கடற்கரையில் ஒதுங்கிய அஸ்திகலசங்களால் ஜேர்மனியில் குழப்பம்: பின்னர் வெளியான உண்மை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் முகவரி கொண்ட மூன்று அஸ்திகலசங்கள் நெதர்லாந்து கடற்கரையில் ஒதுங்கியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ஒரு பள்ளி மாணவன், மீனவர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் ஆளுக்கொன்றாக மொத்தம் மூன்று அஸ்திகலசங்களை நெதர்லாந்து கடற்கரையில் கண்டெடுத்ததாக பிரபல ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது.

ஜேர்மனி உட்பட பல நாடுகளில் இறந்தவர்களின் உடல் பாகங்களை கையாளுதல் சட்டப்படி குற்றமாகும்.

இறந்தவர்களின் சாம்பல் அடங்கிய அஸ்திகலசங்களை தோட்டத்திலோ, வீட்டிலோ வைப்பது குற்றம் என்பதால் அவை இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அதேபோல் மட்கும் பொருளால் செய்யப்பட்ட அஸ்திகலசங்களை மட்டுமே கடலில் அடக்கம் செய்யலாம், ஆனால் இந்த குறிப்பிட்ட மூன்று கலசங்களும் அலுமினியத்தால் ஆனவை.

இதனால் ஜேர்மனியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், நெதர்லாந்து சரக்குக் கப்பல் நிறுவனம் ஒன்று, மொத்தமாக பலரது அஸ்திகலசங்களை கடலில் அடக்கம் செய்ய திட்டமிட்டிருந்ததில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், அஸ்திகலசங்களை கையில் வைத்திருந்த கப்பல் ஊழியர் ஒருவரின் கையிலிருந்து மூன்று கலசங்கள் தவறி கடலில் விழுந்து விட்டதாகவும், அவைதான் கடற்கரையில் ஒதுங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது அந்த மூன்று கலசங்களில் இரண்டு முறைப்படி அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இன்னொன்று விரைவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்த அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர், அந்த கலசங்களுக்கு உரிமையானவர்களின் உறவினர்களிடம் எவ்விதம் மன்னிப்புக் கோருவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers