கண்டிப்பாக முடி வெட்டிக் கொள்ள வேண்டும்: ஜேர்மன் வீரர் தொடர்ந்த வித்தியாசமான வழக்கில் தீர்ப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெண்களைப்போல நீளமாக முடி வளர்க்க தனக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி ஜேர்மன் ராணுவ வீரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனது தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் விருப்பமுடையவரான ஜேர்மன் ரணுவ வீரர் ஒருவர் பெண்கள் மட்டும் நீளமாக முடி வளர்ப்பதற்கு அனுமதி அளித்துள்ள சட்டம் பாகுபாடு காட்டுவதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தார்.

முற்காலத்து ஆண்கள் நீளமாக முடி வளர்த்ததாகவும், அது ஆண்மைக்கு அடையாளமாக கருதப்பட்டதாகவும் அவர் வாதிட்டார்.

அப்படியிருக்க பெண்களுக்கு மட்டும் நீளமாக முடி வளர்க்க அனுமதியளிப்பது ஏன் என்பது தனக்குப் புரியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பு அவரது விருப்பத்துக்கு மாறாக வந்தாலும், நீதிமன்றம், ராணுவம் தலை முடி தொடர்பான தனது விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

என்றாலும் ஆண்களின் தலைமுடியின் நீளம் தொடர்பான புதிய விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்வரை, பழைய விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு தலைமுடி தொடர்பாக சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதற்கு காரணம், அப்போதுதான் பெண்கள் ராணுவத்தில் சேர விரும்புவார்கள் என்பதற்காகத்தான் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

முடிவாக, வழக்குத் தொடர்ந்த ராணுவ வீரரைப் பொருத்தவரை, அவர் மற்ற ஆண் வீரர்களைப்போல் முடி வெட்டிக்கொள்ளத்தான் வேண்டும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers