Brexit-க்குப்பின் இந்த நாட்டில் வசிக்கும் பிரித்தானியர்களின் ஓட்டுநர் உரிமங்களின் நிலை என்னவாகும்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட்டுக்குப்பின் தங்கள் ஓட்டுநர் உரிமம் என்னவாகும் என்பது குறித்து ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்களுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தங்களுக்குப்பின் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமா அல்லது ஒப்பந்தங்கள் எதுவும் செய்யாமலே வெளியேறுமா, இந்த இரண்டு நிலைப்பாடுகளும் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை எவ்விதத்தில் பாதிக்கும் என்பது குறித்த பல சந்தேகங்கள் நிலவுகின்றன.

  1. முதலாவது ஒப்பந்தம் ஒன்றிற்குப்பின் பிரித்தானியா வெளியேறும் நிலைப்பாட்டை கருத்தில் கொள்வோம். மாறும் காலகட்டம் (transition period) முடியும் வரைக்கும் (டிசம்பர் 2020) உங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமம் ஜேர்மனியில் செல்லுபடியாகும்.
  2. வெளியேறும் ஒப்பந்தமின்றி பிரித்தானியா வெளியேறும் நிலைப்பாட்டை கருத்தில் கொள்வோம்

மார்ச் 30 முதல் பிரித்தானியா ஒரு மூன்றாவது தரப்பு நாடாக கருதப்படும் என்பதால், உங்கள் ஓட்டுநர் உரிமம் உடனடியாக செல்லாததாகக்கூடும்.

ஜேர்மன் அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகாத நிலையில், இது இறுதியான தகவல் என்று எடுத்துக்கொள்ளப்படக்கூடாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்யலாம்?

நீங்கள் தொடர்ந்து ஜேர்மனியில் இருக்க முடிவு செய்தால், உங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்திற்கு பதிலாக ஜேர்மன் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை மாற்ற முடிவு செய்தால் கூடியவரையில் விரைவாக விண்ணப்பியுங்கள்.

ஜேர்மன் ஓட்டுநர் உரிமத்தை பெற்ற பிறகு நீங்கள் பிரித்தானியாவுக்கு திரும்ப முடிவு செய்தால் என்ன செய்வது?

பிரித்தானிய அரசு இணையதளம் ஒன்று, நீங்கள் ஜேர்மன் ஓட்டுநர் உரிமத்தை பெற்ற பிறகு பிரித்தானியாவுக்கு திரும்பினால் பிரித்தானியாவில் அதற்கு பதிலாக, பிரித்தானிய ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கிறது.

வெளியேறும் ஒப்பந்தம் இல்லாமலே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால்?

பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தம் எதையும் செய்யாமலே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் ஒரே நாளில், அதாவது 29/30 மார்ச் 2019 அன்றே பிரித்தானியா மூன்றாவது தரப்பு நாடாக மாறிவிடும்.

மூன்றாவது தரப்பு நாடுகளைப் பொருத்த வரையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு விதிகள் பொருந்தும்.

மூன்றாம் தரப்பு நாடுகளின் குடிமக்கள் ஜேர்மனிக்குள் வந்து ஆறு மாதங்களுக்குள் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஜேர்மன் ஓட்டுநர் உரிமமாக மாற்ற வேண்டும்.

ஆக, ஆறு மாதங்களுக்குமேல் ஜேர்மனியில் தங்கும் பிரித்தானியர்களின் ஓட்டுநர் உரிமங்கள் 30 மார்ச் 2019 அன்றிலிருந்து செல்லாததாகிவிடும்.

புதிதாக தேர்வுக்கு உட்பட வேண்டியிருக்குமா?

சில குறிப்பிட்ட நாட்டு குடிமக்கள் மட்டும் தேர்வு ஒன்றிற்கு உட்பட வேண்டியிருக்கும். பிரித்தானியா அதில் அடங்குமா இல்லையா என்பது அது பிரெக்சிட் விடயத்தில் எடுக்கும் முடிவைப்பொறுத்துதான் அமையும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers