brexit-ஆல் ஜேர்மனியில் 100,000 பேர் வேலை இழப்பர்: எச்சரிக்கை செய்தி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாமலேயே பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டால் ஜேர்மனியில் 100,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதால் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரெக்சிட் திகதி நெருங்கி வரும் நிலையில், ஒப்பந்தங்கள் எதைக் குறித்தும் இனி பேச்சுவார்த்தைகள் கிடையாது என்றே ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.

எனவே, தனது நாடாளுமன்றத்திற்குள்ளேயே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த பிரித்தானிய பிரதமர் தெரெச மே திணறி வரும் நிலையில், ஒப்பந்தங்கள் செய்யப்படாமலே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால், அது மற்ற உறுப்பு நாடுகளில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படப்போவது ஜேர்மனிதான் என்று ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மனி அளவுக்கு வேலை வாய்ப்பு விடயத்தில் அதிகம் பாதிக்கப்படப்போவது வேறெந்த நாடாகவும் இருக்க முடியாது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

ஒப்பந்தங்கள் அற்ற பிரெக்சிட் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஆறில் ஒருவர் வேலை இழக்கலாம் என தெரிய வந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Leibniz Institute for Economic Research, Halle மற்றும் Martin-Luther-University, Halle Wittenberg ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இவ்வாறு தெரிவித்துள்ளன.

இதனால்தான் பிரான்ஸ் ஜேர்மனி முதலான நாடுகள் பிரெக்சிட் தொடர்பில் அவ்வளவு அழுத்தத்திற்குள்ளாகியுள்ளன.

ஜேர்மனி, தான் உற்பத்தி செய்யும் கார்களில் பெரும்பாலானவற்றை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில், கார் உற்பத்தி தொழில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு பாதிக்கப்படலாம்.

2017ஆம் ஆண்டில் ஜேர்மனி 770,000 வாகனங்களை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ள நிலையில், புதிய வரி விதிப்பால் 15,000 பேர் வேலையிழக்க நேரிடும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் இன்றி பிரித்தானியா வெளியேறுமானால், உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படி கார் இறக்குமதிக்காக 10 சதவிகித வரி விதிக்கப்படும்.

ஒப்பந்தங்கள் அற்ற பிரெக்சிட்டால், மற்ற எந்த துறையில் ஏற்படும் தாக்கத்தை விடவும் ஆட்டோமொபைல் துறையில் குறிப்பிடத்தக்க அளவிலான தாக்கம் இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

Volkswagen கார்களை உற்பத்தி செய்யும் நகரமான Wolfsburg மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

அங்கு மட்டுமே சுமார் 500 பேர் வேலையிழக்க நேரலாம். உலகம் முழுவதிலும் வேலையிழக்கவுள்ள 612,000 மக்களில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் மட்டுமே, சுமார் 180,000 பேர் வேலையிழக்க உள்ளதாக, அந்த ஆய்வு அதிர்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers