வட ஆப்பிரிக்காவிற்கு அதிக அகதிகளை நாடு கடத்தும் ஜேர்மனி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட துனிஷியா, மொராக்கோ மற்றும் அல்ஜீரியா நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் அந்த நாடுகளுக்கு தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது.

அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை வேகப்படுத்துவதற்காக அந்த நாடுகளை பாதுகாப்பான நாடுகள் என அறிவிக்க ஜேர்மனி விரும்புகிறது.

கடந்த ஆண்டு அந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 35 சதவிகிதம் உயர்வைக் காண முடிந்தது.

வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்ட, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 2018இல் 1,873ம், 2017இல் 1,389ம் ஆகும்.

கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2015ஐ ஒப்பிடும்போது 14 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொராக்கோவுக்குதான் மிக அதிக எண்ணிக்கையிலான அகதிகள் நாடு கடத்தப்பட்டனர், 2015இல் 634 ஆக இருந்த அந்த எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த ஆண்டு பிற ஆப்பிரிக்க நாடுகளான கானா மற்றும் காம்பியாவுக்கும் அதிக எண்ணிக்கையிலான அகதிகள் நாடு கடத்தப்பட்டனர்.

மேலும், கடந்த ஆண்டு 422 பேர் ரஷ்யாவுக்கும், 212 பேர் இந்தியாவுக்கும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சர்ச்சைக்குரிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 121இலிருந்து 284 ஆக உயர்ந்தது.

ஜேர்மன் அரசு துனிஷியா, மொராக்கோ மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளை பாதுகாப்பான நாடுகள் என்ற பட்டியலில் சேர்க்கும்படி வற்புறுத்தி வருகிறது.

அதனால் புகலிட கோரிக்கைகளை பரிசீலிப்பதையும், நாடு கடத்துதலையும் வேகப்படுத்தலாம் என ஜேர்மனி கூறுகிறது.

ஆனால் கடந்த வாரம் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் மேல் சபை அந்த மூன்று நாடுகளையும் ஜார்ஜியாவையும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கும் வரைவு ஒன்றை நிராகரித்து விட்டதால் நாடு கடத்துதலை வேகப்படுத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்