தந்தையை பிரிய மறுத்ததால் ஜேர்மன் மீட்பு கப்பலிலேயே சிக்கித்தவிக்கும் அகதிக் குழந்தைகளின் பரிதாப நிலை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

புதனன்று ஜேர்மன் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்றின் மீட்புக் கப்பல் ஒன்று மத்தியதரைக்கடலில் சிக்கித் தவித்த 64 அகதிகளை மீட்டது.

இத்தாலி கடற்கரையை அந்த மீட்புக் கப்பல் அடைந்த நிலையில், அதிலிருந்த ஒரு வயது மற்றும் 6 வயதுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது அம்மாக்கள், மற்றும் ஒரு கர்ப்பிணிப்பெண் ஆகியோரை மட்டும் ஏற்றுக்கொள்ள இத்தாலி சம்மதித்தது.

ஆனால் அவர்களுடன் பிள்ளைகளின் தந்தைகளை அனுமதிக்க முடியாது என்றும் இத்தாலி கூறிவிட்டது.

ஆனால் அந்த அப்பாக்கள் இல்லாமல் கப்பலை விட்டு இறங்கமாட்டோம் என அந்த குழந்தைகள் கண்ணீர் விட்டுக் கதறினர்.

இதற்கிடையில் ஜேர்மன் தொண்டு நிறுவனத்தை கடுமையாக விமர்சித்த இத்தாலி உள்துறை அமைச்சர் மாட்டியோ சால்வினி, அப்படியானால் அந்த குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் பெர்லினை நோக்கி போக வேண்டியதுதான் என்றார்.

அவரது கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த Sea-Eye என்னும் அந்த தொண்டு நிறுவனம், அம்மாக்களையும் பிள்ளைகளையும் அப்பாக்களிடமிருந்து பிரிப்பது, குடும்பத்தை பிரிப்பதற்கு சமம், மட்டுமல்ல, அது மனோரீதியான சித்திரவதையும் ஆகும் என்று கூறியது.

இதற்கிடையில் பெர்லினில் பேசிய உள்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர், தனது பங்கை நிறைவேற்றும் வகையில் அந்த 64 அகதிகளில் சிலரை வரவேற்க தயாராக இருந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் இத்தாலி தங்களை ஏற்றுக்கொள்ளததால், வேறு வழியின்றி Sea-Eye தொண்டு நிறுவனத்தின் கப்பல் 64 அகதிகளுடன் மால்டா தீவு நோக்கி செல்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மால்டா குடும்பங்களை பிரிப்பதை வலியுறுத்தவில்லை என அது தெரிவித்தது. அந்த கப்பலில் ஆறு நாடுகளைச் சேந்தவர்கள் இருந்தாலும், அவர்களில் பலர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers