மேலாடையின்றி சூரியக்குளியல் மேற்கொள்ள முனிச் நகர மக்களுக்கு அனுமதி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் கொளுத்தும் வெயில், மேலாடையின்றி சூரியக்குளியல் போடலாமா என்பது போன்ற விடயங்களை நாடாளுமன்றம் வரை கொண்டு போய் விட்ட நிலையில், முனிச் நகர மக்களுக்கு மேலாடையின்றி சூரியக்குளியல் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று Isar நதிக்கரையில் மேலாடையின்றி சில பெண்கள் சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த பாதுகாவலர்கள் சிலர், முறையாக உடையணியுமாறு அவர்களை எச்சரித்தனர்.

அவர்கள் பெண்களை அவமதிப்பதைக் கண்டு அங்கிருந்த மற்ற பெண்களும் அவர்களுக்கு ஆதரவாக தங்கள் மேலாடைகளை அகற்ற, உடனடியாக அங்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.

வந்த பொலிசாரும் பெண்களை மார்பகங்களை மறைக்கும் வகையில் உடையணியுமாறு வற்புறுத்த, விடயம் சீரியஸானது.

ஆண்கள் மட்டும் அரை நிர்வாணமாக குளியல் போட அனுமதிக்கப்படும் நிலையில், பெண்களுக்கு ஏன் அனுமதியில்லை என்று பெண்கள் குரல் எழுப்ப, பிரச்சினை பெரிதாயிற்று.

இதற்கிடையில் உள்ளூர் பசுமைக் கட்சியினர், எத்தகைய நீச்சல் உடை அணிவது என்பது தொடர்பான விதிமுறைகளை நகர கவுன்சில் விளக்க வேண்டும் என கோரினர்.

ஆளும் Christian Democratic கட்சியினரும் இதையே வலியுறுத்த, உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி அவசர விண்ணப்பம் ஒன்றை அளித்தனர்.

அதன்படி முடிவை அறிவித்த நகர கவுன்சில், Isar நதிக்கரையில் சூரியக்குளியல் எடுப்போர், தங்கள் முதன்மை இனப்பெருக்க உறுப்புகளை முழுமையாக மறைக்கும் வகையில் நீச்சல் உடையணிந்தால் போதும் என அறிவித்துள்ளது.

அதாவது வேறு வகையில் கூறினால் மேலாடையின்றி சூரியக்குளியல் போட எந்த தடையும் இல்லை!

ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வெயில் சுட்டெரிக்கும் நிலையில், புதன்கிழமை, கிழக்கு ஜேர்மனியில் வெப்ப நிலை 38.9C ஆக பதிவாகியிருந்தது.

இதுவரை ஜேர்மனியில் ஜூன் மாதங்களில் பதிவானதிலேயே, இதுதான் அதிக வெப்ப நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்